மகாராஷ்டிராவில் முதல்வர் பதவியை கைப்பற்றிய விவகாரம்: ரூ.40,000 கோடியை பாதுகாக்க நடத்திய நாடகம்...பாஜ எம்பி சர்ச்சை பேச்சு; பட்நவிஸ் மறுப்பு

பெங்களூரு: ‘தேவேந்திர பட்நவிஸ் மகாராஷ்டிரா முதல்வரானது ரூ.40 ஆயிரம் கோடி மத்திய நிதியை பாதுகாக்கத்தான். இது நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம்’ என்று முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜ எம்பியுமான அனந்த்குமார்  ஹெக்டே தெரிவித்த நிலையில், அதனை பட்நவிஸ் மறுத்துள்ளார்.மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் பாஜ - சிவசேனா கூட்டணி முதல்வர் பதவியை பிரித்துக் கொள்வது தொடர்பாக எழுந்த மோதலில் பிரிந்தது. எந்த கட்சிக்கும் ஆட்சி  அமைக்க பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் கூட்டணியாக ஆட்சி அமைக்க முயன்றன.

அப்போது யாரும் எதிர்பாராத சூழலில் என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் துணையுடன் பெரும்பான்மை இல்லாத சூழலிலும் தேவேந்திர பட்நவிஸ் 2வது முறையாக முதல்வராகப் பதவி ஏற்றார். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க  முடியாமல் 80 மணிநேரத்தில் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவி ஏற்று பெரும்பான்மையை நிரூபித்துள்ளார். இந்நிலையில், கர்நாடக மாநிலம் எல்லப்பூரில் பாஜ எம்பியும்  முன்னாள் மத்தியஅமைச்சருமான அனந்தகுமார் ஹெக்டே பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதாவது: மகாராஷ்டிராவில் பாஜவுக்கு பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தும் பட்நவிஸ் 2வது முறையாக முதல்வராகப் பதவி ஏற்று 80 மணி  நேரத்தில் பதவி விலகினார். இந்த நாடகம் எதற்காக நிகழ்த்தப்பட்டது தெரியுமா?.

இது அனைவரின் மனதிலும் எழும் பொதுவான கேள்விதான். முதல்வர் பொறுப்பில் மத்திய நிதி ரூ.40 ஆயிரம் கோடி குவிந்து கிடக்கிறது. ஒருவேளை என்சிபி, காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், ரூ.40 ஆயிரம் கோடியை  நிச்சயம் மாநிலத்தின் மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல், பல்வேறு விஷயங்களுக்கும் சுயலாபத்துக்கும் பயன்படுத்துவார்கள். அதனால், சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ள தகவல்  அறிந்ததும், முதல்வராக பட்நவிஸ் பதவியேற்ற நாடகம் அரங்கேற்றப்பட்டது. அதனால்தான் பட்னாவிஸ் பதவி ஏற்கும் போது சில ‘அட்ஜஸ்மென்ட்’ செய்யப்பட்டது.

அவர் பதவி ஏற்று 15 மணிநேரத்துக்குப்பின், பட்நவிஸ் முறைப்படி அந்த பணத்தைப் பாதுகாத்துவிட்டார். அந்த பணம் அனைத்தும் மீண்டும் மத்திய அரசுக்கு சென்றது.  இவ்வாறு அவர் பேசினார். பாஜ எம்பியின் பேச்சு, பெரும் சர்ச்சையை  ஏற்படுத்திய நிலையில், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பட்நவிஸ், ‘‘முதல்வர் என்ற வகையில்  இதுபோன்ற பெரிய கொள்கை முடிவு எதுவும் நான் எடுக்கவில்லை. இதுபோன்ற  குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை’’ என்றார்.

Related Stories: