சையது முஷ்டாக் அலி டிராபி டி20தமிழகத்துக்கு 181 ரன்கள் இலக்கு: மணிஷ் பாண்டே விளாசல்

சூரத்: சையது முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த கர்நாடகா அணி, தமிழகத்துக்கு 181 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. குஜராத் மாநிலம் சூரத்தில் நேற்றிரவு நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பீல்டிங் தேர்வு செய்தது. கர்நாடகா அணியில் கே.எல்.ராகுல், படிக்கல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி 39 ரன் சேர்த்த நிலையில், கே.எல்.ராகுல் (22) விக்கெட்டை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஷ்வின், அடுத்த பந்திலேயே மயங்க் அகர்வாலை கோல்டன் டக் ஆக்கி கர்நாடகாவுக்கு அதிர்ச்சி தந்தார்.

படிக்கல் (32) விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார். 10 ஓவரில் கர்நாடகா அணி 3 விக்கெட்டுக்கு 87 ரன் சேர்த்திருந்த நிலையில், கேப்டன் மணிஷ் பாண்டே, ரோகன் கடம் ஜோடி அணியை ஸ்கோரை உயர்த்தியது. மணிஷ் பாண்டே அட்டகாசமாக ஆடி அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 68 ரன் சேர்த்த நிலையில் கடம் (35) முருகன் அஷ்வின் சுழலில் வெளியேறினார்.  அடுத்து வந்த கருண் நாயர் 8 பந்தில் 17 ரன் விளாசிய நிலையில், முருகன் அஷ்வின் வீசிய ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

கர்நாடகா அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன் சேர்த்தது. மணிஷ் பாண்டே 45 பந்தில் 60 ரன்களுடன் (2 சிக்சர், 4 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். தமிழக அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஷ்வின், முருகன் அஷ்வின் தலா 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் கைப்பற்றி இருந்தார். இதையடுத்து, 181 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. ஷாருக்கான், ஹரி நிசாந்த் தொடக்க வீரர்களாக பேட் செய்தனர்.

Related Stories: