மரணம் துரத்தும் வாழ்க்கை! ஆரோக்கியத்தின் விலை அப்பாவிகளின் உயிர்?

உங்களுக்கு காலைக்கடன்... எங்களுக்கு ஜென்மக்கடனா...?’’ என்ற வாசகத்தைப் படிக்கும் போதெல்லாம் இனம்தெரியாத குற்ற உணர்வு ஏற்படுகிறது. கழிப்பறை மூலம் நோய் பரவாமல் இருக்க எத்தனை எத்தனையோ பளிச் விளம்பரங்கள். ஆனால், அந்த கழிப்பறை கழிவுகளைச் சுத்தம் செய்யும் சமூகத்தின் வாழ்க்கை நெடுங்காலமாக இருளடைந்து கிடக்கிறது. 1993ம் ஆண்டு முதல், 2019 ஜூன் 30ம் தேதி வரை இந்தியா முழுவதும் மனிதக்கழிவுகளை மனிதனே அள்ளுதல் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது  சுமார் 776 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும் 213 பேர் பலியாகி உள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் சமூக நீதித்துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்தியாவில் இப்படியான உயிரிழப்பில் கிட்டத்தட்ட 45 சதவீதம் தமிழகத்தில் நடப்பது தான் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15 ஆயிரம் கோடி நிதி: கழிவுநீர்த் தொட்டி, மலக்குழிக்குள் இறங்க மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாது என தேசிய துப்புரவாளர் ஆணையத்தின் விதி உள்ளது. ஆனால், தமிழகத்தில் இந்த உத்தரவு பின்பற்றப்படுவதில்லை என்பதைத் தான் மலக்குழி மரணங்கள் எடுத்துரைக்கின்றன.

பாதாளச்சாக்கடை அடைப்பை எடுக்கும் போது விஷவாயு தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு உடனடியாக 10 லட்ச ரூபாயை சம்பந்தப்பட்ட உரிமையாளர் அல்லது செப்டிக் டேங்க் வண்டி காண்ட்ராக்டர் அளிக்க வேண்டும். அத்துடன் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது ஐபிசி 304(1) அதாவது அஜாக்கிரதையாக இருந்து உயிரிழப்பு ஏற்பட காரணமாக இருத்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற விதியும் உள்ளது.

இந்த விதிகள்படி, தமிழகத்தில் இதுவரை உயிரிழந்த குடும்பங்களுக்கு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதா என்பது மில்லியன் டாலர் கேள்வி.  இந்த லட்சணத்தில் தான் 2018 -19ம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்திற்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளம்பரப்படுத்தியுள்ளது. தூய்மை இந்தியா இயக்கம் 2014ம் ஆண்டு துவக்கப்பட்ட போது இந்தியாவின் தூய்மையின் அளவு 38.7 சதவீதம் என்றும், அது 2019ல் 98.9 சதவீதமாக மாறியுள்ளது என அந்த இயக்கத்தின் இணையதளம் கூறுகிறது. ஆனால், இந்தியாவில் திறந்த வெளியில் மலம்  கழிப்பவர்கள் எண்ணிக்கை கோடிக்கணக்கில் இருப்பதாக பில்கேட்ஸால் துவங்கப்பட்ட  ‘கேட்ஸ் பவுண்டேஷன்’ அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் மலக்குழி மரணம் குறைவாக நடைபெற்ற மாநிலம் கேரளா தான். 2017ம் ஆண்டு அங்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் மலக்குழி மரணத்தைத் தடுக்க அந்த மாநில அரசு ரோபோ கண்டுபிடித்துள்ளது. வைஃபை மற்றும் ப்ளூடூத் வசதிகளுடன் கூடிய இந்த ரோபோவில் சாக்கடைகளை சுத்தப்படுத்துவதற்காக கை போன்ற பகுதியும், அதனை கட்டுப்படுத்துவதற்கான கருவிகளும் பொறுத்தப்பட்டுள்ளது.  ஜென் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த ரோபோ திருவனந்தபுரத்தில், முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கும்பகோணம், கோவையில் மட்டும் இந்த ரோபோ பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மனிதக்கழிவை மனிதன் அகற்றும் திட்டத்தை முற்றிலும் ஒழிக்க இந்த ரோபோ வாங்க வேண்டியது காலத்தின் அவசியம். மலம் அள்ளும் தொழிலாளர்களை அந்த தொழிலில் இருந்து மீட்டு மாற்றுப்பணி வழங்க வேண்டும். அவர்களுக்கு உரிய மருத்துவ வசதி, குடியிருப்பு உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. ஆனால், அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மறுவாழ்வு நிதி 95 சதவீதம் வெட்டப்பட்டு விட்டது. பிறகெப்படி அவர்களது நலனைக் காப்பது? மலக்குழி மரணங்கள் இனியும் ஏற்படாமல் தடுக்க தேவை அனுதாபம் அல்ல. கடுமையான நடவடிக்கை தான். திறந்தவெளியில் மலம் கழிப்பது எப்படி குற்றமோ, அதேபோல அதை மனிதரை கொண்டு அகற்றச் சொல்வதும் குற்றமோ குற்றம் என்ற நிலை வரவேண்டும். வருமா?

ஓய்வுக்கு முன் 80 சதவீத சாவு: தமிழகத்தில்  15 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 12,524 கிராம ஊராட்சிகளில் துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என சுமார் 35 ஆயிரம் பேர் பணியாற்றுவதாக கூறப்படுகிறது. தூய்மை என்பது குப்பையை அகற்றுவது  என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. குப்பையின் துர்நாற்றத்தை விட, பல மடங்கு கொடுமையானது மலத்தின்  வீச்சம்.

மாநகராட்சி, பேரூராட்சிகளில் தூய்மைப்பணி என்பதும் மக்கும் குப்பை, மக்கா குப்பையைப் பிரிப்பதில் தான் உள்ளது. பாதாளச்சாக்கடையில் இருந்து வெளியேறும் மலக்கழிவுகள் உள்ளே அடைப்பு ஏற்பட்டு சாலையில் பெருக்கெடுத்தால், அந்த அடைப்பை சரிசெய்ய உரிய நவீன உபகரணங்கள், அதற்கான கருவிகள் தமிழகத்தில் இல்லை. கையுறை, மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகள் இல்லாமல் பாதாளச்சாக்கடைக்குள் இறங்க  ஒப்பந்த தொழிலாளிக்கு வழங்கப்படும் கூலி வெறும் 600 ரூபாய். அப்படி மலக்குழிக்குள் இறங்கும் போது தான் விஷவாயு தாக்கி தொழிலாளி இறந்து போகிறார்.

இப்படியான சாவு ஒருபுறம் என்றால், துப்புரவுப் தொழிலாளர்கள் ஓய்வு பெறுவதற்குள் நோய் தாக்கி 80 சதவீதம் பேர் இறந்து  போவதாக தேசிய துப்புரவுத் தொழிலாளர் ஆணையம் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் ஏராளமானோர் தோல், சுவாசக்கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும், பலர்  மனநோயாளியாகவும் மாறி விடுகின்றனர். நாசியை விட மனதைப் புரட்டும் மலவாசனையை பொறுக்க முடியாமல் பலர் குடிநோயாளிகளாக மாறி விடுகின்றனர். நமது குழந்தைகள் மலம் கழித்தால் கூட மறந்தும் கூட வலது கையைப் பயன்படுத்துவதில்லை. இடதுகை கொண்டு தான் நீர் மூலம் கழுவி விடுகிறோம். ஆனால், ஊர்  மக்களின் மலக்கழிவுகள் நிரம்பிய பள்ளங்களுக்குள் ஒரு மனிதனை இறக்கி சுத்தம் செய்யும் வளர்ச்சியில் தான் தூய்மை இந்தியா இருக்கிறது.  மனிதக்கழிவு மனிதனே அகற்றுவது தண்டனைக்குரிய குற்றம் என்றாலும், இந்தியாவில் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் இந்த தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றால், குற்றவாளி யார்?

Related Stories: