அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ‘லகலக’ அமெரிக்காவில் ஓபிஎஸ் வாங்கிய ‘தங்கதமிழ்செல்வன்’ விருது

கம்பம்: கம்பம் அருகே நடந்த ‘சுருளி சாரல் விழாவில்’ பங்கேற்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘அமெரிக்காவில் தங்கதமிழ்செல்வன் விருது வாங்கிய ஓ.பன்னீர்செல்வம்’ என கூறியது கலகலப்பை ஏற்படுத்தியது. தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளி அருவியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் ‘சுருளி சாரல் விழா’ நேற்று துவங்கியது. விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தேனி எம்பி ரவீந்திரநாத் குமார்,  கலெக்டர் பல்லவி பல்தேவ், மேகமலை வன உயிரின கோட்ட காப்பாளர் சச்சின் போஸ்லே மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், `‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமெரிக்காவில் ‘தங்கதமிழ்ச்செல்வன் விருது’ வாங்கினார்’’ என்று பேசினார். மேடையில் சிரிப்பலை எழுந்ததும், உடனே ஓபிஎஸ் பக்கம் திரும்பியவர், ‘‘அது என்ன விருது?’’ என்று கேட்டு பின் திருத்தி ‘‘தங்க மகன் விருது’’ என கூறியவர், ‘‘இதுக்கென்ன செய்றது அவரும் நம்ம ஆளுதானே? அதனால பேசிக்கலாம்’’’ என்று சமாளித்தார். விதிகளை மீறி வெடித்தது வேட்டு: வனவிலங்கு சரணாலயப்பகுதிக்குள் வேட்டு வெடிக்க அனுமதியில்லை.

ஆனால், துணை  முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை வரவேற்க சுருளி அருவியில் அதிமுகவினர் வேட்டு வெடித்தனர். இதை வனத்துறையினரும் கண்டு கொள்ளவில்லை. இன்றும் சாரல் விழா நடக்கிறது.

Related Stories: