தமிழர் விடுதலை படையைச் சேர்ந்த 11 பேர் குற்றவாளிகள் : 22 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டிமடம் காவல்நிலைய தாக்குதல் வழக்கில் தீர்ப்பு

சென்னை: ஆண்டிமடம் காவல்நிலைய தாக்குதல் வழக்கில் தமிழர் விடுதலை படையைச் சேர்ந்த 11 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள வெடிகுண்டுகள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளது. 11 பேர் மீதான தண்டனை விவரம் பிற்பகலில் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கின் பின்னணி

கடந்த 1997ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் காவல் நிலையம் வெடிகுண்டு வீசி தகர்க்கப்பட்டு, அங்கிருந்த ஆயுதங்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து பெரம்பலூர் கியூ பிரான்ச் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழர் விடுதலைப்படையைச் சேர்ந்த 15 பேரை கைது செய்தனர்.இந்த வழக்கானது பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.

நீதிபதி செந்தூர்பாண்டியன் தீர்ப்பு

இதனிடையே கைது செய்யப்பட்ட சுந்தரம், வெங்கடேசன், ரவிச்சந்திரன், முருகையன் உள்ளிட்ட 15 பேர் மீது குற்றம் அரசு தரப்பில் 101 ஆவணங்களும் 67 சான்றிதழ்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிபதி செந்தூர்பாண்டியன் தீர்ப்பு வழங்கியுள்ளார். அப்போது கைது செய்யப்பட்ட 15 பேரில் 11 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்தார். மேலும் அவர்களுக்கான தண்டனை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

Related Stories: