உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து மீனாட்சியம்மன் கோயிலில் தீவிர வெடிகுண்டு சோதனை: பிளாட்பார கடைகள் அகற்றம்

மதுரை: மத்திய உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீவிர வெடிகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டன. பிளாட்பார கடைகள் அகற்றப்பட்டன. பலத்த சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.  கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள கோயில்களில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை டிஜிபி அலுவலகத்தில் இருந்து,  மதுரை, மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கக்கோரி, மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு உத்தரவு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று முதல் மதுரை மீனாட்சியம்மன் கோயில் நான்கு சித்திரை வீதிகளில் தலா 5 போலீசார் வீதம் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வாகனங்கள் சித்திரை வீதிகளுக்கு வெளியே நிறுத்தப்படுகின்றன.  தீவிர சோதனைக்கு பிறகே கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.  மோப்ப நாய் மூலம் கோயிலை சுற்றி தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் துணை கமிஷனர் கார்த்திக் ஆகியோர் நேற்று காலை கோயிலை சுற்றிலும் வலம் வந்து ஆய்வு செய்தனர். மேலும் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐகள் என சுழற்சி  முறையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் கோயில் பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறும்போது, ‘‘தற்போது ஐயப்பன் சீசன் என்பதால், பக்தர்கள் வருகை அதிகளவில் உள்ளது. மதுரைக்கு மிரட்டல்கள் எதுவும் வரவில்லை. டிச. 6 தினம் வருவதாலும் நகருக்குள்ளும்  பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.மீனாட்சி கோயிலைச் சுற்றி தெற்கு, கிழக்கு சித்திரை வீதிகளில் பிளாட்பாரத்தில் இருந்த 50க்கும் மேற்பட்ட கடைகளை போலீசார் நேற்று அகற்றினர். பிச்சைக்காரர்களும் அகற்றப்பட்டனர்.

Related Stories: