'கோட்சே ஒரு தேசபக்தர்'மக்களவையில் பாஜக எம்.பி. பிரக்யா பேச்சு: ராஜ்நாத் சிங் கண்டனம்

டெல்லி: மகாத்மா காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்ற சித்தாந்தத்தை பாஜக கண்டிக்கிறது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ஆனால் அவரின் பதிலால் மனநிறைவு அடையாத எதிர்க்கட்சிகள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. மக்களவை இன்று தொடங்கி அலுவல்கள் எடுத்துக் கொள்ளப்பட்டதும் மக்களவையில் நேற்று பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் கோட்சே தேசபக்தர் என்று பேசிய விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.

அப்போது காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் கோட்சேவை தேசபக்தர் என்றும், காங்கிரஸ் கட்சியை தீவிரவாதக் கட்சி என்றும் பேசியிருக்கிறார். தேசத்துக்கு ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளார்கள். மக்களவையில் இதுபோன்ற கருத்துகளை பிரக்யா தாக்கூர் பேசுவதற்கு எவ்வாறு துணிச்சல் வந்தது. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

மகாத்மா காந்தி மற்றும் நேருவின் பெயரைப் பயன்படுத்தி பாஜக அரசியல் செய்ய முயல்கிறது. பாஜகவின் சித்தாந்தத்தால்தான் பிரக்யா தாக்கூர் இதுபோன்ற கருத்துகளைப் பேசியிருக்கிறார் எனத் தெரிவித்தார். ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கருத்துக்கு ஆதரவாக திரிணமூல் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், என்சிபி, ஏஐஎம்ஐஎம் கட்சி எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து கோஷமிட்டனர். முழக்கமிட்ட அனைத்து எம்.பி.க்களையும் சமாதானம் செய்யும் முயற்சியில் அவைத்தலைவர் ஓம் பிர்லா இறங்கி அமைதியாக இருக்கையில் அமருமாறு கேட்டுக்கொண்டார்.

அப்போது திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய், எம்.பி. அசாசுதீன் ஒவைசி ஆகியோர் தாங்கள் பேசுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனக் கேட்டனர். அப்போது அவைத்தலைவர் ஓம் பிர்லா பேசுகையில், பிரக்யா தாக்கூரின் பேச்சு அவைக்குறிப்பில் இடம் பெறவில்லை இதை விவாதிக்க வேண்டாம் என்றார். அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுந்து பேசுகையில், பிரக்யா தாக்கூரின் கருத்துகளை பாஜக கண்டிக்கிறது. கோட்சே தேசபக்தர் எனும் எந்த சித்தாந்தத்தையும் பாஜக ஏற்காது. மகாத்மா காந்தியின் சித்தாந்தம், கொள்கைதான் தேசத்துக்கு வழிகாட்டி தொடர்ந்து பின்பற்றுவோம் எனத் தெரிவித்தார். ஆனால் ராஜ்நாத் சிங்கின் பதிலால் மனநிறைவு அடையாத திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ், திமுக, இடது சாரிகள், என்சிபி, ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். பகுஜன் சமாஜ், பிஜூ ஜனதாதளம், தெலுங்கு தேசம், டிஆர்எஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் மட்டும் மக்களவையில் அமர்ந்திருந்தனர்.

Related Stories: