தீவிரவாதி பிரக்யா சிங் மற்றொரு தீவிரவாதியான நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று அழைக்கிறார்: ராகுல் காந்தி கடும் தாக்கு

புதுடெல்லி: தீவிரவாதி பிரக்யா சிங் மற்றொரு தீவிரவாதியான நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று அழைக்கிறார், ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களவையில் சிறப்புப் பாதுகாப்புப் படைச் சட்டத் திருத்தம் குறித்த விவாதம் நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் திமுக எம்பி ஆ.ராசா பேசினார். அப்போது அவர் காந்தியை கொலை செய்ததற்கு கோட்சே தெரிவித்த காரணத்தை சுட்டிக் காட்டினார். அதில், காந்தியை கொலை செய்த கோட்சே 32 ஆண்டுகளாக காந்தி மீது வஞ்சம் கொண்டிருந்தேன். அதன்பிறகு தான் காந்தியை திட்டமிட்டு கொலை செய்தேன்.

ஏனென்றால் காந்தி ஒரு சார்பு கொள்கையுடவர் என நினைத்தேன் எனக் கூறியிருந்தார் எனத் தெரிவித்தார். அந்த நேரத்தில் ஆ.ராசாவின் பேச்சுக்கு குறுக்கிட்டு பேசிய மத்திய பிரதேச மாநில பாஜக சர்ச்சை எம்பி பிரக்யா சிங் தாகூர், இந்த விவாதத்தில் தேச பக்தரை குறிப்பிடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். பிரக்யா சிங் தாகூர் காந்தியை கொலை செய்த கோட்சேவை தேசபக்தர் என்று மீண்டும் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சாத்வி பிரக்யா தாகூரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பாதுகாப்பு தொடர்பான நாடளுமன்ற ஆலோசனைக்குழுவில் இருந்து சாத்வி பிரக்யா தாகூர் நீக்கப்படுவதாக பாஜக அறிவித்தது.

எனினும், பிரக்யா தாகூர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், நாடாளுமன்றம் வெளியே நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, பிரக்யா சிங் வார்த்தை என்பது பாஜக, ஆர்எஸ்எஸ் மனதில் உள்ள வரிகள்தான். எனவே அவர் மீது நடவடிக்கை எடுங்கள் என கூறி எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என தெரிவித்தார். இந்த பேட்டிக்கு சில நிமிடங்கள் கழித்து, ராகுல் காந்தி ட்விட்டர் கணக்கிலிருந்து ஒரு ட்வீட் வெளியானது. அதில், தீவிரவாதி பிரக்யா சிங், தீவிரவாதி நாதுராம் கோட்சேவை, தேசபக்தர் என அழைக்கிறார். இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இது கருப்பு தினம், என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: