பொருளாதார மந்தநிலை மாநிலங்களவையில் அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் தாக்கு: நிர்மலா சீதாராமன் மறுப்பு

புதுடெல்லி: நாட்டின் பொருளாதார நிலை குறித்த விவாதத்தை மாநிலங்களவையில் நேற்று தொடங்கி வைத்து காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா பேசியதாவது:கடந்த சில ஆண்டுகளாக, நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் முடங்கி விட்டன. மிகப் பெரிய பொருளாதார பிரச்னையை நாம் எதிர்நோக்கி உள்ளோம். பொருளாதார வளர்ச்சியின்  நான்கு இன்ஜின்களான முதலீடு, தொழிற்சாலை உற்பத்தி, கடன் வாங்குதல், ஏற்றுமதி எல்லாமே முடங்கி கிடக்கிறது. ஜிடிபி வளர்ச்சி கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. முதலீடு 7 சதவீதம் குறைந்துள்ளது. வாகனம் மற்றும் ஜவுளித்துறையில் 25 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்கார்பரேட் வரியை குறைப்பதன் மூலம் அதிகம் சாதிக்க முடியாது. அந்த முதலீட்டை கடனை அடைக்கத்தான் கார்பரேட் நிறுவனங்கள் பயன்படுத்தும், வேலைவாய்ப்பை உருவாக்க பயன்படுத்தாது.

ஏழைகளின் கையில் பணம் இருந்தால்தான் பொருளாதார நிலை மேம்படும். எனவே, தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை நாட்களை 150 நாட்களாக உயர்த்த வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு ரூ.400 கூலியாக வழங்க வேண்டும். கடந்த 70 ஆண்டுகளாக உருவாக்கிய லாபம் ஈட்டும் பொதுத் துறை நிறுவனங்களை அரசு விற்றுக் கொண்டிருக்கிறது என்றார்.திரிணாமுல் எம்.பி. டெரிக் ஓபிரைன் உட்பட பலரும் பொருளாதார வீழ்ச்சிக்கு அரசு தான் காரணம் என குறை கூறினர். இறுதியில் விவாதத்துக்கு பதிலளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘கடந்த 2009-14ம் ஆண்டு காலத்தில் அன்னிய முதலீடு 189.5 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. ஆனால், 5 ஆண்டு பா.ஜ ஆட்சியில் 283.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஐமு. கூட்டணி 2வது ஆட்சியில், 304.2 பில்லியன் டாலராக இருந்த அன்னிய செலாவணி கையிருப்பு, பா.ஜ ஆட்சியில் 412.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. வளர்ச்சி குறைந்திருக்கலாம். ஆனால், வீழ்ச்சி ஏற்படவில்லை. இந்த நிலைமை, அடுத்தாண்டு மார்சுக்குள் மாறி விடும்,’’ என்றார்.

Related Stories: