இனவெறிக்கு இடமில்லை ஆர்ச்சருக்கு குவியும் ஆதரவு

வெலிங்டன்: நியூசியலாந்து ரசிகர் இனவெறியுடன் கிண்டல் செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளான ஜோப்ரா ஆர்ச்சருக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது. நியூசிலாந்து-இங்கிலாந்து இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் நடந்தது. அப்போது ரசிகர் ஒருவர் இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் நிறத்தத்தை குறிப்பிட்டு இனவெறியுடன் கேலி செய்துள்ளார். ‘அது தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக’ ஆர்ச்சர் தனது டிவிட்டரில் குறிப்பிட்டார். அதனையடுத்து பல்வேறு தரப்பினர் ரசிகரின் செயலை கண்டித்ததுடன், ஆர்ச்சருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து இங்கிலாந்து அணியின் இயக்குநர் ஆஷ்லி கில்ஸ், ‘எந்த அணியிலும் இனவெறிக்கு இடமில்லை. நாங்கள் ஆர்ச்சருக்கு எல்லா வகையிலும் ஆதரவாக இருப்போம். குற்றவாளியை கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகிறோம்’ என்று கூறியுள்ளார். இந்நிலையில் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், ‘இனரீதியான அவமரியாதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நடந்த செயலுக்காக ஆர்ச்சரிடம் மன்னிப்பு கோருகிறோம். அவரை தொடர்பு கொண்டும் மன்னிப்பு கேட்போம்.

சம்பந்தப்பட்ட ரசிகர் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் அவர் யார் என்பதை கண்டறியமுடியவில்லை. இருப்பினும் கண்காப்பு கேமராகளில் இருக்கும் பதிவுகள் மூலம் அவர் யார் என்பதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க  அதிக விழிப்புணர்வுடன் இருபோம்’ என்று தெரிவித்துள்ளது. ஆர்ச்சருக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்களும் மட்டுமின்றி இங்கிலாந்து கால்பந்து வீரர் மார்கஸ் ராஷ்ஃபோர்டு உட்பட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: