திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நாயுடு காலனியில் சிதிலமடைந்த பழைய குடியிருப்பை இடிக்க வேண்டும்: காவலர் குடும்பத்தினர் வலியுறுத்தல்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நாயுடு காலனி தெரு அருகே, கடந்த 1998ம் ஆண்டு காவலர் குடும்பங்கள் வசிப்பதற்காக மூன்று அடுக்குகள் கொண்ட 80 குடியிருப்புகள் கட்டப்பட்டு, அதில் காவலர்கள் குடியமர்த்தப்பட்டனர். இந்த குடியிருப்புகளை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால் பல இடங்களில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தது.  மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டதால் மழை காலங்களில் வீட்டினுள் தண்ணீர் கசிய ஆரம்பித்தது. அதுமட்டுமின்றி தரைதளம் மிகவும் தாழ்வாக இருந்ததால் மழை காலத்தில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்புகளை சூழ்ந்து காணப்படும். இதனால் இங்கு வசிக்கும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பல்வேறு தொற்று நோய் பாதிப்புக்கு ஆளாகினர். இதனால் இந்த குடியிருப்பில் தொடர்ந்து வசிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், படிப்படியாக காவலர்கள் தங்களது வீடுகளை காலி செய்துவிட்டு, வாடகை வீடுகளில் தஞ்சமடைந்தனர்.

இந்நிலையில், இந்த குடியிருப்பு அருகே, கடந்த 2016ம் ஆண்டு, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் பல கோடி ரூபாய் மதிப்பிட்டில் மூன்று அடுக்குகள் கொண்ட 32 புதிய குடியிருப்புகள் மற்றும் காவலர்கள் தங்கும் அறையும் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.

இந்த வீடுகள் முறைப்படி சம்மந்தப்பட்ட காவலர்களின் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, காவலர் குடுங்கள் இங்கு வசித்து வருகின்றன. ஆனால், சிதிலமடைந்துள்ள நிலையில் உள்ள பழைய 80 குடியிருப்புகள் இதுவரை இடித்து அகற்றப்படவில்லை. இதனால், விஷப்பூச்சிகள் வசிப்பிடமாக மாறியுள்ளது. மேலும், புதிதாக கட்டப்பட்ட காவலர்கள் தங்கும் அறை முழுமையாக பயன்படாமல் பெரும்பாலான நாட்களில் பூட்டியே கிடப்பதால் அதனுள் எலிகளும், பூனைகளும் தஞ்சமடைந்து துர்நாற்றம் வீசுகிறது. பழைய குடியிருப்பு வளாகத்தில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதால் கொசு உற்பத்தி அதிகரித்து காவலர் குடும்பங்களுக்கும், அருகில் வசிக்கும் பொதுமக்களுக்கும் தொற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.  

எனவே, அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த புதிய காவலர்கள் தங்கும் அறையை ஓய்வுக்கு மட்டும் பயன்படுத்தாமல் காவலர் பணி ஓய்வு, குடும்பங்களின் பிறந்தநாள் போன்ற சிறு, சிறு விழா போன்ற நிகழ்ச்சிகள் நடத்த அனுமதித்தால் பயனுள்ளதாக இருக்கும். பழுதடைந்து கிடக்கும் பழைய குடியிருப்பை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய காவலர் குடியிருப்பு கட்ட வேண்டும் என்று காவலர் குடும்பங்கள், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய கழகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: