தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் வெற்றிபெற்று எடப்பாடி கையில் வழங்குவோம்: பொதுக்குழுவில் தங்கமணி பேச்சால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிருப்தி

சென்னை: தமிழகத்தில் 2021ல் நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் 234 தொகுதியிலும் வெற்றி பெற்று, முதல்வர் எடப்பாடி கையில் வழங்குவோம் என்று அதிமுக பொதுக்குழுவில் அமைச்சர் தங்கமணி பேசியது, துணை முதல்வர்  ஓபிஎஸ் ஆதரவாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் சென்னை வானகரத்தில் நடந்தது. கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர். 3 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்ததால் மிகவும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.இந்த பரபரப்பான சூழ்நிலையில், அமைச்சர் தங்கமணி பொதுக்குழு கூட்டத்தில் பேசும்போது, “ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எதிரிகளிடம் இருந்தும் துரோகிகளிடம் இருந்தும் கட்சியை காப்பாற்றும் நிலை இருந்தது. அது மட்டுமல்லாமல்,  தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்தது. அதையெல்லாம் முதல்வர் எடப்பாடி தனது ஆளுமை திறமையால் சமாளித்து, தமிழகத்தை அமைதிப்பூங்காவாக உருவாக்கி உள்ளார். 2021ம் ஆண்டு அதிசயம் நடக்கும் என்று கூறி  வருகிறார்கள். ஆம். நிச்சயம் அதிசயம் நடக்கும். அது, 234 தொகுதியிலும் அதிமுக வெற்றிபெறும் அதிசயமாகத்தான் இருக்கும். இந்த ஆட்சி பற்றி எப்படியாவது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த பல்வேறு அம்புகளை வீசுகிறார்கள். அவைகளை,  வீசுபவர்கள் பக்கமே திருப்பி விடும் ஆற்றல் மிக்க தலைவராக எடப்பாடி உருவாகியுள்ளார். இதே உற்சாகத்தோடு அதிமுக தொண்டர்கள் பணியாற்றி, வருகிற 2021ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில், 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று  முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையில் ஒப்படைப்போம்” என்றார்.

அமைச்சர் தங்கமணி பொதுக்குழுவில் இப்படி பேசியது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவரை மேடையில் வைத்துக்கொண்டே அமைச்சர் தங்கமணி பேசியுள்ளார். இதற்கு ஓபிஎஸ்  எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.இதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சிலர் கூறும்போது, “அமைச்சர் தங்கமணி பொதுக்குழுவில் பேசியது தவறான முன்னுதாரணம். அதிமுக ஆட்சியையும், கட்சியையும் ஓபிஎஸ், எடப்பாடி என இரண்டு பேரும்  சேர்ந்துதான் நடத்தி வருகிறார்கள். ஆனால் தங்கமணி, எடப்பாடி பழனிசாமிதான் 2021ம் ஆண்டு முதல்வர் வேட்பாளர் என்பதுபோல் தன்னிச்சையாக பேசியுள்ளார். எப்படி அவர் சுயமாக முடிவு எடுக்கலாம். கொங்கு மண்டல அமைச்சர்கள்  அனைவரும் சேர்ந்துதான் இதுபோன்ற நடவடிக்கைகளில் இப்போது ஈடுபடுகிறார்கள் என நினைக்கிறோம். இதன்மூலம் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து ஓரங்கட்ட பார்க்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அமைச்சர்  தங்கமணியின் பேச்சுக்கு முதல்வர் எடப்பாடிதான் விளக்கம் அளிக்க வேண்டும்” என்றனர்.மேலும், 2021ம் ஆண்டுக்குள் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்து அதிமுக கட்சியில் இணைந்துவிடுவார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், தற்போது தங்கமணி பேச்சு மூலம் சசிகலாவுக்கு இனி அதிமுகவில் இடம் இல்லை என்பதும்  உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: