புதிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் 9 முதல் பிளஸ்2 வரை செமஸ்டர் முறை: நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு திட்டம்

சென்னை: புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் 9ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டர் முறை அறிமுகமாக உள்ளது. நாடாளுமன்ற நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் இதற்கான முடிவுகள் எடுத்து அறிவிக்க மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை முடிவு செய்துள்ளது. கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு புதிய கல்விக் கொள்கை ஒன்றை தற்போதைய மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கான வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு வெளியிட்டது. புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு கருத்து கேட்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் வரை கெடுவிதிக்கப்பட்டது. பின்னர் மக்கள் கருத்தின் அடிப்படையில் சிலவற்றை சேர்க்கவும் நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருத்தி அமைக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை கடந்த வாரம் தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வாக்கெடுப்புக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கல்விக் கொள்கையில், ஏராளமான தேர்வுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 3, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்றும், அதற்கு பிறகு 9ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை செமஸ்டர் தேர்வுகளையும் எழுத வேண்டும். குறிப்பாக, இந்த 4 ஆண்டுகளில் 8 செமஸ்டர் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும். இதனால் மாணவர்களுக்கு மன அழுத்தம் உருவாகும் என்று பொதுவாக கருத்து நிலவுகிறது.

மேலும் 9ம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடத் தொகுப்பை தேர்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 9ம் வகுப்பில் தொழில் கல்வியை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 வயதில் மாணவர்கள் தங்களுக்கான விருப்ப பாடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்பதால் கிராமப்புற மாணவர்களை பள்ளியை விட்டு வெளியேற வைத்து விடும். இதுபோன்ற பிரச்னைகள் உள்ள கல்வி கொள்கையில் சில திருத்தங்களை மத்திய அரசு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு, 9ம் வகுப்பு முதல் பிளஸ்2 வகுப்புகளுக்கு செமஸ்டர் தேர்வு முறை ஆகியவற்றில் திருத்தம் செய்யாது என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த ஆபத்து

2017 கணக்கெடுப்பின்படி தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வீதம் 95 சதவீதமாக இருந்தது. அதே மாணவர்கள் ேமனிலைக் கல்விக்கு வரும் போது எண்ணிக்கை 51 சதவீதமாக உள்ளது. இதற்கு காரணம் தேர்வுகளும், ஆசிரியர்கள் பற்றாக்குறைதான். கிராமப் பகுதிகளில் 30 சதவீதம் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகள் நிறைய இருக்கின்றன. பாடங்கள் நடத்த ஆசிரியர்களே இல்லாத நிலையில் 9ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை 6 மாதத்துக்கு ஒருமுறை செமஸ்டர் முறையில் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்றால் எப்படி முடியும் என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர். அரசுப் பள்ளிகளில் செமஸ்டர் முறையை கொண்டு வந்தால் கல்வி தனியார் மயமாக வழிவகுக்கும்.

தமிழக குழு எங்கே?

புதிய பாடத்திட்டம் உருவாக்க அமைக்கப்பட்ட அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழு செயல்பாட்டில் இருக்கிறதா இல்லையா என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த குழு என்ன செய்கிறது என்றும் தெரியவில்லை. குழுவின் செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழகத்திலும் நடைமுறைக்கு வரப்போகிறது என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

Related Stories: