ஈரோடு கலெக்டர் ஆபீசில் கல்குவாரி ஏலம் டெண்டர் விண்ணப்பம் போட வந்த பாமகவினருடன் அதிமுகவினர் மோதல்: போலீஸ் முன்பே தாக்குதல்; நுழைவாயிலில் தர்ணா

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், அந்தியூர், கோபி, பெருந்துறை, சென்னிமலை, பவானி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 42 கல்குவாரிகள் உள்ளன. இதில், அந்தியூர் தொகுதியில் மட்டும் 26 கல்குவாரிகள் உள்ளன. கனிம வளத்துறையின் கட்டுப்பாட்டில் இந்த கல்குவாரிகள் இயங்கி வருகிறது.  மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளுக்கு 5 ஆண்டுக்கு ஒருமுறை ஏலம் விடப்படுகிறது.  இந்நிலையில், அந்தியூர் அருகே சென்னம்பட்டி வனப்பகுதியை ஒட்டியுள்ள 4 கல்குவாரிகளுக்கான டெண்டர் காலம் முடிந்த நிலையில் இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் உள்ள டெண்டர் பெட்டியில் விண்ணப்பத்தை போட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கடந்த 13ம் தேதி ஏலம் நடத்தப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால், டெண்டர் பெட்டியில் அ.தி.மு.க.வினரை தவிர மற்றவர்கள் டெண்டர் போட விடாமல் தடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனால், பிரச்னை ஏற்பட்டதால் டெண்டர் 19ம் தேதிக்கு (நேற்றைக்கு) ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் காலை 11 மணிக்கு டெண்டர் விடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 200க்கும் மேற்பட்ட போலீசார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.  அந்தியூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜாகிருஷ்ணனின் ஆதரவாளர் கார்த்திக் தலைமையில் 10 பேர் கரைவேட்டி கட்டிக் கொண்டு நுழைவாயில் பகுதியில் காத்திருந்தனர். அப்போது டெண்டர் போட வந்தவர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்ததுடன் அவர்கள் கொண்டு வந்த விண்ணப்பங்களையும், காசோலையையும் பறித்தனர்.பா.ம.க. முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் ஆறுமுகம் தலைமையில் கட்சியினர் இந்த ஏலத்தில் கலந்து கொள்ள வந்திருந்தனர். அப்போது, அங்கு கும்பலாக நின்றிருந்த அ.தி.மு.க.வினர் அவர்களை உள்ளே விடாமல் தடுத்தனர். அதிமுகவினரின் இந்த செயலை கண்டித்து பா.ம.க.வினர் டெண்டர் நடக்கும் அறை முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அதன்பின், ஆறுமுகத்தை உள்ளே அனுமதித்தனர்.  தொடர்ந்து டெண்டர் போட வந்தவர்களை தடுத்த அ.தி.மு.க.வினர் அவர்களை தாக்க முயற்சி செய்தனர். அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிப்பேட்டையைச் சேர்ந்த மாதேஸ்வரன் என்பவர் டெண்டர் போட வந்தபோது டெண்டர் விண்ணப்பத்தையும், காசோலையையும் அ.தி.மு.க.வினர் பறித்துக் கொண்டு ஓடினர்.  காலை 11 மணிக்கு துவங்கிய ஏலம் 12.15 மணிக்கு முடிந்தது. இந்த ஏலத்தில் 1வது குவாரி ரூ.45.77 லட்சத்திற்கும், 2வது குவாரி ரூ.31.75 லட்சத்திற்கும், 3வது குவாரி ரூ.29.55 லட்சத்திற்கும், 4வது குவாரி 23 லட்சத்திற்கும் என 4 குவாரிகளும் ஒரு கோடியே 29 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் போனது.  5 ஆண்டுக்கு கல்குவாரி நடத்தி கொள்ள உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. டெண்டரில் கலந்து கொள்ள வந்தவர்களை தடுத்து அ.தி.மு.க.வினர் தாங்கள் நினைத்தது போலவே போலீசாரின் துணையோடு ஏலத்தை எடுத்துக் கொண்டனர்.

Related Stories:

>