எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இன்றி ஆபத்தான முறையில் சிறுவனை வைத்து பாதாள சாக்கடையை சுத்தம் செய்த அதிகாரிகள்: பொதுமக்கள் அதிர்ச்சி

அண்ணாநகர்: நாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆகியும் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவல நிலை இன்றுவரை நீடித்து வருகிறது. இந்தியா வல்லரசுக்கு இணையாக நவீன தொழில்நுட்பத்தையும், தொலைதூரத்தில் எதிரிகளை  இனம் கண்டு தாக்கும் ஏவுகனைகளை தயாரித்தாலும் மனித மான்பை இழிவுபடுத்தும் வகையில் கையினால் மலம் அள்ளுபவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை.நாட்டின் பல்வேறு துறைகளில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி வரும் அரசு, பாதாள சாக்கடையை சுத்தம் செய்வதற்கு மட்டும் தற்போது வரை போதிய நவீன கருவிகளை பயன்படுத்த தயக்கம் காட்டுவது, வேதனையளிப்பதாக சமூக  ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யும் துப்புரவு பணியாளர்கள் பலர் விஷ வாயு தாக்கி இறப்பது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆனாலும், அரசு இதற்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய  நடவடிக்கை எடுப்பதில்லை, என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது, என நீதிமன்றம் உத்தரவிட்டும், இன்று வரை இந்த அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.சென்னையில் கடந்த சில வாரங்களாக அடிக்கடி மழை பெய்து வருவதால், ஆங்காங்கே பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளை  சூழ்ந்துள்ளது. எனவே, கழிவுநீரை அகற்றவும், பாதாள சாக்கடைகளில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்யவும் மாநகராட்சிக்கும், குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியத்துக்கு புகார்கள் வண்ணம் உள்ளன.

ஆனால், பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய போதிய இயந்திரங்கள் இல்லாததால், பல இடங்களில் துப்புரவு பணியாளர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இன்றி பாதாள சாக்கடைக்குள் இறங்கி, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு  வருகின்றனர். இதனால், அவர்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுவதுடன், விஷ வாயு தாக்கி இறக்கும் அபாயம் உள்ளது. கடந்த 12ம் தேதி, ராயப்பேட்டையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த ஒரு வாலிபர், விஷ வாயு தாக்கி இறந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில், பாதாள சாக்கடை அடைப்பை சீரமைக்க,  மாநகராட்சி அதிகாரிகள், எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இன்றி ஒரு சிறுவனை பயன்படுத்திய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  சென்னை மாநகராட்சி, 109வது வார்டுக்கு  உட்பட்ட நெல்சன் மாணிக்கம் சாலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, நீரோட்டம் தடைபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் நேற்று காலை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.  அதன்பேரில் அங்கு வந்த அதிகாரிகள், சுமார் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவனை எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இன்றி, பாதாள சாக்கடைக்குள் இறக்கி, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தினர்.

அவ்வழியே சென்ற பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும், சிறுவனை இதுபோன்ற  ஆபத்தான வேலையில் ஈடுபடுத்திய மாநகராட்சி அதிகாரிகள் மீது மனித உரிமை ஆணையம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தினர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணி செய்யும் தொழிலாளர்கள் மீது அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்களின் பாதுகாப்புக்காக கை உறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை  முறையாக வழங்குவதில்லை.

மேலும், பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய போதி கருவிகள் மாநகராட்சியில் இல்லை. பெயரளவுக்கு சில கருவிகள் இருந்தாலும், அவையும் பழுதாகி பயனற்று கிடக்கிறது. மனித கழிவுகளை மனிதர்கள் மூலம் அகற்றக்கூடாது என  நீதிமன்றம் உத்தரவிட்டபிறகும் அரசு அலட்சியமாக உள்ளது. தற்போது, இந்த அவலத்தில் உச்சமாக சிறுவர்களை பயன்படுத்தி, பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதுபோன்ற செயல்களை அரசு அதிகாரிகள் உடனே கைவிட வேண்டும். இதுபோன்ற  செயலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நீதிமன்றம், மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவு

மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடுக்கவும், நிவாரணம் தொடர்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2009ம் ஆண்டு  வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், உயிர்பலி ஏற்பட்ட குடும்பத்தினருக்கு ₹10 லட்சம் நிவாரணமும்,  அவர்களின் வாரிசுகளுக்கு குலத்தொழில் அல்லாத அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. பின்னர், 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து, மனிதக் கழிவுகளை மனிதனே கையால் அள்ளுவது தடை செய்யப்படுவதாகவும்  அந்த உத்தரவில் சொல்லப்பட்டது. ஆனால் அந்த உத்தரவை மீறி இன்று வரை மனித கழிவுகளை மனிதனே கையால் அள்ளும் கொடுமை அரங்கேறி வருகிறது.தூய்மை இந்தியா  என்ற பெயரில் ஆண்டுதோறும் விளம்பரத்திற்காக  செலவிடப்படும் பல லட்சம் ரூபாய் மூலம், பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் கருவியை அரசு வாங்கி இருந்தால், விஷ வாயு தாக்கி இறக்கும் துப்புரவு தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கும், என சமூக ஆர்வலர்கள்  குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories: