அமெரிக்கா ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்க 10,000 அமெரிக்க டாலர் : துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்  ஆய்வு இருக்கை’ அமைக்க தனது சொந்த பங்காக 10,000 அமெரிக்க டாலர் வழங்குவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் ஹில்டன் ஹோட்டலில், ஹூஸ்டன் பல்கலைக்கழக வேந்தர்  டாக்டர்.ரேணுகத்தாரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியாவில் இருந்து வந்து இங்கு  வெற்றிபெற்ற அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலரை சந்தித்தேன். தமிழ் பண்பாடு,  கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பத்திரமாக பாதுகாப்பதிலும்,  தமிழ்மொழியின் பெருமைகளை நிலைநாட்டுவதிலும் நீங்கள் காட்டும் உங்கள்  ஆர்வத்தினால் நான் கவரப்பட்டேன். கல்வியாளர்களாகவும், பணியாளர்களாவும் வந்த பலர் இன்று தொழில் முனைவோராக,  தொழிலதிபர்களாக மாறியிருக்கிறார்கள். இங்குள்ள  ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ் ஆய்வு இருக்கை’ அமைக்கும் முயற்சி  குறித்து என்னிடம் தெரிவித்தார்கள். இது மிகவும் சரியான நேரத்தில் பொருத்தமான முடிவாக அமைந்திருக்கிறது. தமிழ் ஆய்வு  இருக்கை அமைப்பதற்கு தாங்கள் அளித்துள்ள ஆதரவிற்கு நன்றி தெரிவித்துக்  கொள்கிறேன்.

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் அமைய விருக்கும் தமிழ் ஆய்வு  இருக்கைக்கு தமிழக அரசும் நன்கொடை அளித்திட வேண்டும் என்று உங்கள்  மத்தியில் உள்ள எதிர்பார்ப்பை நான் உணர்ந்திருக்கிறேன். நான் சென்னை  திரும்பியதும், முதல்வருடன் கலந்து ஆலோசித்து,  தமிழ்  இருக்கைக்கு நிச்சயம் தமிழக அரசின் உதவி கிடைப்பதற்கு ஆவண செய்வேன். அமெரிக்கா மற்றும் அமெரிக்க வாழ் இந்தியர்கள்  மற்றும் தொழில் முனைவோர்   தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள் என்று நான் அழைப்பு விடுக்கவே இங்கு  வந்திருக்கிறேன்.  எனவே, இங்குள்ள தொழில் முனைவோர் குழு முதலீடுகள் செய்வது  குறித்து ஆலோசனை நடத்த தமிழ்நாட்டிற்கு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதைத்தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் ஆய்வு இருக்கை இயக்குநர்கள்  குழுவை சந்தித்து பேசினார். அப்போது ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்  ஆய்வு இருக்கை’ அமைப்பதற்கு தனது சொந்த பங்காக 10,000 அமெரிக்க டாலர்  வழங்குவதாக அறிவித்தார். இந்த சந்திப்பின்போது தமிழக அரசின் நிதித்துறை  செயலாளர் கிருஷ்ணன், இந்திய தூதரக அதிகாரி (பொறுப்பு) ராகேஷ் பனாட்டி,  ஹூஸ்டன் தமிழ் ஆய்வு இருக்கை இயக்குநர்கள் குழுவை சேர்ந்த சொக்கலிங்கம்  சாம் கண்ணப்பன், அப்பன், ஆறுமுகம், பெருமாள், நாராயணன், நரசிம்மன்,  விஜயபிரபாகர் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: