அருணாச்சல பிரதேசம் சென்ற ராஜ்நாத் சிங்குக்கு சீனா கடும் எதிர்ப்பு : அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தல்

பும்லா: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக அருணாசலப் பிரதேசம், சீனாவின் ஆளுகைக்கு உட்பட திபெத் பகுதியை சேர்ந்தது என சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இம்மாநிலத்தில் 3,488 கி.மீ் நீள எல்லை தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

ஒவ்வொரு முறையும் அருணாசலப் பிரதேசத்தை இந்திய தலைவர்கள் பார்வையிடும்போதும் சீனா தொடர்ந்து தனது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றது. இந்நிலையில், அருணாசலப் பிரதேசத்தில் இந்திய-சீன எல்லையான தவாங்கில் நேற்று முன்தினம் நடந்த மைத்ரி திவாஸ் விழாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், ‘எல்லையில் வசிப்பவர்கள் சாதாரண மக்கள் அல்ல. அவர்கள் நாட்டின் சொத்து,’ என்று கூறினார். இதனை தொடர்ந்து நேற்று  இந்திய -சீன எல்லையில் உள்ள பும்லா ராணுவ முகாமை அவர் பார்வையிட்டார். பின்னர், அவர் அளித்த பேட்டியில், ‘‘இந்திய-சீன எல்லையில் உண்மையான கட்டுப்பாடு கோடு பகுதியில் நமது ராணுவம் மிகவும் விவேகமாகவும், கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்கிறது. அதேபோல், சீன ராணுவமும் செயல்படுகிறது, இதனால், இருநாடுகளுக்கும் இடையே எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் எந்த பதற்றமும் இல்லை,” என்றார்.

ஆனால், ராஜ்நாத் சிங் தவாங் எல்லைப் பகுதியில் ஆய்வு செய்ததற்கு சீனா ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜெங் சுவாவ் கூறுகையில், ‘‘அருணாசலப் பிரதேசம் என்று அழைக்கப்படுவதை சீனா ஒருபோதும் ஒப்புக் கொள்ளவில்லை. அந்த பகுதியில் இந்தியா அதிகாரிகள் அல்லது தலைவர்களால் நடத்தப்படும் நடவடிக்கைகளை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம். சீனாவின் நலன் மற்றும் கவலைக்கு மதிப்பளிக்கும்படி இந்திய தரப்பை கேட்டுக் கொள்கிறோம். எல்லை விஷயத்தை சிக்கலாக்கும் நடவடிக்கைகளை நிறுத்துங்கள். எல்லைப் பகுதியில் அமைதி மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்கான உண்மையான நடவடிக்கைகளை எடுங்கள்,” என்றார்.

Related Stories: