முத்தலாக் சட்டத்தை எதிர்த்து மனு மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: ‘முத்தலாக் சட்டத்தை எதிர்த்து முஸ்லிம் சட்ட வாரியம் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்,’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முஸ்லிம் கணவர்கள் தங்கள் மனைவிக்கு மூன்று முறை ‘தலாக்’ கூறி உடனடியாக விவாகரத்து செய்கிறார்கள். மனைவியிடம் நேரிலோ, எழுத்துபூர்வமாகவோ, வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவோ இப்படி விவாகரத்து செய்வது நடைமுறையில் இருந்து வந்தது.  இது சட்ட விரோதமாகவும், கிரிமினல் குற்றமாகவும் கருதப்படும் என்பதை வலியுறுத்தும் மசோதா கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவசர சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, முத்தலாக் கூறும் கணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

இந்த சட்டத்தை எதிர்த்து, இந்திய முஸ்லிம் தனி சட்ட வாரியம், சீராத் உன் நபி அகடமி என்ற அமைப்பு உள்பட பல்வேறு அமைப்புகளும், தனி நபர்களும் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த மனுக்கள்  உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரமணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நபி அகடமி சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், ‘`ஒரே பிரச்னை தொடர்பாக 20க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. ஒரே பிரச்னைக்காக 100 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால், அவற்றை எல்லாம் எங்களால் விசாரிக்க முடியாது,’’ என்றனர். மேலும், இந்த மனுக்களுக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: