திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சலுகை விலையில் வழங்கப்படும் லட்டு விற்பனை நிறுத்தம்: ஒவ்வொரு பக்தருக்கும் இலவசமாக ஒரு லட்டு வழங்க முடிவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் ஒவ்வொரு பக்தருக்கும் இலவசமாக ஒரு லட்டு வழங்கவும், சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் லட்டுகளின் விற்பனையை நிறுத்தவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இதுதவிர வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக வருகின்றனர். அவ்வாறு வரக்கூடிய பக்தர்களில் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கும், ஆதார் அட்டை மூலமாக சர்வ தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கும், அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் பாதயாத்திரையாக வரக்கூடிய திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்றவர்களுக்கு தரிசனத்திற்கு செல்லக்கூடிய வைகுண்டம் காத்திருப்பு அறைக்கு செல்லும் நுழைவாயிலில் சலுகை விலையில் 4 லட்டுகள் 70க்கு டிக்கெட் வழங்கப்படுகிறது.

இதே லட்டு தேவஸ்தானம் சார்பில் கோயிலுக்கு வெளியே ஒரு லட்டின் விலை 50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.   இந்நிலையில் சலுகை விலையில் பக்தர்களுக்கு வழங்கக்கூடிய லட்டுகளை முற்றிலுமாக ரத்து செய்து, சுவாமி தரிசனத்திற்கு செல்லக்கூடிய பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்கி மீதமுள்ள லட்டுகள் 50க்கு விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. விரைவில் இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: