சவுடு மணல் தொடர்பான வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்காக மாற்றி ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: 13 மாவட்டங்களில் சவுடு மண் எடுக்க தடை விதிக்கப்பட்ட பொதுநல வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்காக மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் இலந்தைகுட்டத்தை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, 13 மாவட்டங்களில் சவுடு மண் அள்ளுவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி வழங்க ஆகஸ்ட் 28ம் தேதி இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில் நீதிமன்றம் விதித்த தடையை குறிப்பிடாமல் அந்த வழக்கை திரும்ப பெற மனுதாரர் அனுமதி பெற்றார். இதனை தொடர்ந்து அந்த வழக்கில் தங்களையும் இணைத்திருந்த பிற மனுதாரர்கள் இது குறித்து முறையிட்ட நிலையில் வபாஸ் பெற்ற மனுதாரர் நாகேந்திரனை நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி நீதிமன்றத்தில் ஆஜரான மனுதாரர் தான் தொடர்ந்த வழக்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக பலரும் தனது மனைவியிடம் முறையிடுவதாகவும், இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்படுவதாகவும் நீதிமன்றத்தில் விளக்களித்தார். இதனை கேட்ட நீதிபதிகள் பொதுநல வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்காக மாற்றவும், இடைக்கால தடை விதித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு முன்பாகவே வழக்கை பட்டியலிடவும் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு மனுதாரர் நீதிமன்ற பதிவாளரிடம் கடிதமளிக்கவும் உத்தரவிட்டனர்.

Related Stories: