தூத்துக்குடியில் சுவாரஸ்யம்: இருசக்கர வாகனத்தை இலவச நூலகமாக மாற்றி இளைஞர் அசத்தல்..குவியும் பாராட்டுக்கள்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் தனது இருசக்கர வாகனத்தையே இலவச படிப்பகமாக மாற்றி, சமூகத்தையே வாசிப்பு பழக்கத்திற்கு இட்டு செல்லும் தீரா காதலுடன் களமிறங்கி இருக்கிறார் இளைஞர் ஒருவர். அறிவுக்கண்ணை சரியாக திறந்தால் அனைவரும் இங்கே ஒளிபெறலாம் என்ற மூத்தோரின் சிந்தனையை இறுக பற்றியுள்ளார் தூத்துக்குடி துறைமுகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் சைமன். தனது இருசக்கர வாகனத்தில் 4 கம்புகளை கட்டி அதில் நூற்றுக்கணக்கான புத்தகங்களை தொங்கவிட்டு அதையே ஒரு நூல் நிலையமாக மாற்றியிருக்கிறார்.

அதற்கு குமிழ் முனை என்று பெயரிட்டு தூத்துக்குடி, மதுரை சாலையில் வ.ஊ.சி. கல்லூரி அருகே தனது வாசிப்பு வண்டியை நிறுத்தியிருக்கிறார். இந்த குமிழ் முனையில் இளம் எழுத்தாளர்கள், குழந்தை எழுத்தாளர்களின் புத்தகங்கள் உள்ளிட்ட ஏராளமான நூல்கள் உள்ளன. தினமும் இரவு 8 மணி முதல், 10 மணி வரை சாலை ஓரத்தில் இந்த வாசிப்பு வண்டி நிறுத்தப்படுகிறது. இளைஞர்களும், நடைப்பயிற்சிக்கு வந்து செல்வோரும் புத்தகங்களை எடுத்து அருகே அமர்ந்து வாசிக்கின்றனர். தொடங்கிய 15 நாட்களில் 30 பேரை வாசிப்பு பழக்கத்திற்குள் ஈர்த்திருப்பதாக கூறுகிறார் சைமன்.

இளம் எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை படிப்பதோடு எழுத்தாளர்களிடமும் பேசுவது மகிழ்ச்சி அளிப்பதாக அங்கிருந்த வாசகர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். கதை, கவிதை, கட்டுரை புத்தகங்கள் வாசிக்க அருமையாக இருந்ததாக கூறிய அவர், தாம் வேளைக்கு சென்று திரும்பும்போது வழியில் வாசித்துவிட்டு செல்வதாக தெரிவித்தார். வாசிப்பு பழக்கத்திற்காக மட்டுமின்றி தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியர், வேளைக்கு தயாராகும் இளைஞர்களுக்கும் இந்த வாசிப்பு வண்டி உதவியாக இருக்கும் என கூறுகிறார் கதிரவன் என்ற இளைஞர்.

கேட்கும் புத்தகங்களை வாங்கி தருவது, நூல்களை வீட்டிற்கு கொண்டு சென்று திரும்ப தரும் முறையும் இருப்பதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். தனிமனித வளர்ச்சி, நாட்டின் முன்னேற்றத்திற்கும், சமூகம் அறிவொளி பெறவும் வாசிப்பு பழக்கம் அவசியமானது. அந்த பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வாசிப்பு வண்டியை அறிமுகப்படுத்திய சைமனை அனைவரும் பாராட்டிச் செல்கின்றனர்.

The post தூத்துக்குடியில் சுவாரஸ்யம்: இருசக்கர வாகனத்தை இலவச நூலகமாக மாற்றி இளைஞர் அசத்தல்..குவியும் பாராட்டுக்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: