வனப்பகுதியில் வெடிமருந்து தொழிற்சாலை வனஉயிரினங்கள் அழியும் அபாயம்: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் அருகே வனப்பகுதியில் வெடிமருந்து தொழிற்சாலையால் வன உயிரினங்கள் அழியும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம், வைகுண்டம் அருகேயுள்ள வல்லநாடு மலையில் வல்லநாடு வெளிமான் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு புள்ளிமான்கள், மிளா, முயல், முள்ளம்பன்றி, மலைப்பாம்பு, மயில் மற்றும் பல்வேறு வகையான வன உயிரினங்கள் உள்ளன. இதனால் வல்லநாடு மலைப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. பொதுவாக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் வனஉயிரினங்களின் பல்லுயிர் பெருக்கத்திற்கு தடையாக இருக்கும் வகையிலான அபாயகரமான தொழிற்சாலைகள், அச்சுறுத்தும் வகையிலான அதிக சத்தம் கொண்ட அதிர்வுகளை உண்டாக்கும் தொழிற்சாலைகள் அமைக்கக்கூடாது என்பது வனத்துறையின் விதிமுறையாகும். ஆனால், வல்லநாடு வனப்பகுதியை பொறுத்தவரை இந்த விதிமுறைகள் புறந்தள்ளப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட வல்லநாடு வெளிமான் சரணாலயத்தின் மலை அடிவாரத்திலுள்ள பத்மநாபமங்கலம் வனப்பகுதியில் ஒரு வெடிமருந்துகளுக்கான மூலப்பொருட்கள் தயாரிக்கும் கம்பெனி பல ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.  இங்கு வெளியூர்களை சேர்ந்த வெடிமருந்துகளை தயாரிக்கும் பணியாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள் என ஏராளமானவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த வெடிமருந்து தொழிற்சாலையில் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் மூலப்பொருட்களை கொண்டு வெடிகளுக்கான மருந்து பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.  அதாவது, சல்பர், சார்கோல், பொட்டாசியம் நைட்ரேட் போன்ற ரசாயனப் பொருட்கள் ஒன்றாக கலக்கப்பட்டு பின்னர் அவை நவீன தானியங்கி இயந்திரங்கள் மூலமாக கேக் வடிவ பார்களாக தயாரிக்கப்படுகிறது.

 பின்னர் இந்த பார்கள் இயந்திரங்கள் மூலமாக பேன்சி ரக பட்டாசுகள், வானவெடிகள், மத்தாப்பு போன்ற வெடிகளை தயாரிக்கும் வகையிலான மருந்து பொருட்களாக வடிவமைக்கப்பட்டு வெளியிடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.சுமார் 650 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கம்பெனியில் வெடிகளுக்கு தேவையான மருந்துகளை தயாரிப்பதற்காக 25 பிளான்டுகள் சுமார் 160ஏக்கரில் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிளான்டுகள் மனிதர்களின் உதவியின்றி தானியங்கி முறையில் இயங்கும் சீனாவின் நவீன இயந்திரங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இங்கு நவீன இயந்திரங்கள் மூலம் வெடிமருந்து பொருட்கள் தயாரிக்கப்படும் போது ஏற்படும் அதிபயங்கரமான நில அதிர்வுகளால் வன உயிரினங்களின் பல்லுயிர் பெருக்கம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.

 வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த வெடிமருந்து தொழிற்சாலை வன உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த வெடிமருந்து தொழிற்சாலையால் வன உயிரினங்களின் பெருக்கம் குறைந்து வருவதாகவும், கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்பு ஏற்பட்டு அழிந்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.வனஉயிரினங்களை பாதுகாத்திடும் வகையில் வருவாய்த்துறை, வனத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வெடிவிபத்தில் தப்பிய ஊழியர்கள்:

வெடிமருந்து தொழிற்சாலையிலுள்ள இயந்திரங்கள் அனைத்தும், சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்டு அங்குள்ள தொழில்நுட்ப பணியாளர்களின் உதவியுடன் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களை இயக்குவது குறித்து சீன தொழில்நுட்ப வல்லுநர்கள் அளித்த பயிற்சியின் அடிப்படையில் இங்குள்ள பணியாளர்கள்  இயந்திரங்களை இயக்கி வருகின்றனர். கடந்தாண்டு இந்த தொழிற்சாலையின் ஒரு பிளான்டில், வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின்போது, அதிபயங்கர சத்தம் ஏற்பட்டது.  இந்த அந்த கட்டிடம் முழுவதும் வெடித்து சுக்குநூறாக நொறுங்கி சிதறியது. கட்டிடத்தின் இடிந்த துகள்கள், இரும்புகம்பிகள், கான்கிரீட் தளங்கள், இடிதாங்கி போன்றவை நீண்ட தூரம் தூக்கி வீசப்பட்டு சிதறியது. இந்த பயங்கரமான வெடி விபத்தில், பணியாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என்றாலும் வெடி விபத்தினால் வன உயரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.  

அதிகாரிகள் உறுதி என்னாச்சு:

இந்த வெடி விபத்து குறித்து அப்போதைய வைகுண்டம் டிஎஸ்பி சகாயஜோஸ், தாசில்தார் சந்திரன் மற்றும் வனத்துறையினர் உள்ளிட்ட அரசுத்துறையினர் சம்பவ இடத்தினை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது விதிமுறைகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

Related Stories: