இன்று (நவ.8) வீரமாமுனிவர் பிறந்தநாள் இத்தாலியில் பிறந்து தமிழ் இலக்கணம் படித்தவர்

தமிழகத்தில் பிறந்து நாம் தமிழ் பேச, எழுத தயங்குகிறோம். ஆனால், நம் தமிழ் மொழியின் அருமை, பெருமைகளை வெளிநாட்டினர் பலர் மொழி பெயர்த்து உலக அளவில் கொண்டு சென்றுள்ளனர். அவர்களில் முக்கியமானவர்தான் வீரமாமுனிவர். இத்தாலியின், வெனிஸ் மாகாணத்தில், கேஸ்திகிளியோன் என்ற ஊரில் நவ.8, 1680ம் ஆண்டு பிறந்தவர் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி. இவர் எப்படி வீரமாமுனிவராக மாறினார் என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? இவர் கிறிஸ்தவ மதத்தை பரப்பும் நோக்கில் கடந்த 1710ம் ஆண்டு தமிழகத்திற்கு வந்தார். இங்கு மக்களிடம் பேசுவதற்காக தமிழை பேச்சு மொழியாக கற்கத் தொடங்கியவர், தமிழின் மீது தீராக்காதல் கொண்டார்.

தமிழ் மொழியில் இலக்கணம், இலக்கியத்தை கற்க வேண்டுமென ஆசைப்பட்டார். மேலும், இந்த மொழியை உலகமெங்கும் கொண்டு சேர்க்க வேண்டுமென விரும்பினார். முதல்கட்டமாக அந்நியமாக தெரிந்த தனது பெயரை வீரமாமுனிவர் என அழகுபட மாற்றிக் கொண்டார். சுப்ரதீக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் கற்றார். பின்னர் சொற்பொழிவே நடத்துமளவுக்கு தமிழில் புகுந்து விளையாடினார். மேலும், தமிழில் புகழ் பெற்ற உலகப்பொதுமறையாம் திருக்குறள், ஆத்திச்சூடி, திருப்புகழ்,  தேவாரம் உள்ளிட்ட அரிய பல தமிழ் நூல்களை, ஐரோப்பிய மொழிகளில் வெளியிட்டார். தமிழை எளிமையாக பிறர் கற்க,  தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1,000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும். பின்பு 4,400 சொற்களைக் கொண்ட தமிழ் - போத்துக்கீய அகராதியை உருவாக்கினார்.

பெயர் சொற்களை தொகுத்து ‘பெயரகராதி’, பொருள்களின் பெயர்களைத் தொகுத்து ‘பொருளகராதி’, சொற்கள் பலவாகக் கூடிநின்று ஒரு சொல்லாக வழங்குவதைத் தொகுத்துத் ‘தொகையராதி’ எனவும், எதுகை மற்றும் ஓசை ஒன்றாக வரும் சொற்களை வரிசைப்படுத்தித் ‘தொடையகராதி’ எனவும் அமைத்து தமிழர்களையை அசர வைத்தவர். இதனால் தமிழ் அகராதியின் தந்தை என போற்றப்பட்டார். மேலும், கவிதை வடிவில் எளிதில் புரியாமல் இருந்த தமிழ் இலக்கண,  இலக்கியங்களை உரைநடையாக மாற்றி ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து தமிழாசிரியராக மாறி மாணவர்களுக்கு எளிய முறையில் தமிழ் இலக்கணத்தையும் பயிற்றுவித்தார். திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பாலை லத்தீன் மொழியில் மொழி பெயர்த்தார்.

பரமார்ந்த குருவின் கதை, வாமன் கதை, வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, வேத விளக்கம், செந்தமிழ் இலக்கணம் ஆகிய நூல்களையும் எழுதி உள்ளார். இவர் எழுதிய தேம்பாவணி 3 காண்டம், 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3,615 விருத்தப்பாக்களால் ஆனது. தமிழரல்லாத ஒரு அயல்நாட்டினர் அற்புதமான முறையில் எழுதிய காப்பியமாக தேம்பாவணி பெரும் பெயர் பெற்றது. 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும், இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ் பண்பாட்டுக்கேற்ப தேம்பாவணி என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.

முத்துசாமிப் பிள்ளை என்பவர், வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றை 1822ல் எழுதி, அந்நூலை அவரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழுக்கு வீரமாமுனிவர் ஆற்றியுள்ள பணிகள் இன்னும் பல நூற்றாண்டுகளை தாண்டி வாழும். கற்க வந்த மொழியை பெருமைப்படுத்திய வீரமாமுனிவர் பிப்.2ம் தேதி, 1747ம் ஆண்டு உயிரிழந்தார். அவர் மறைந்தாலும், அவரின் தமிழ் தொண்டும், எழுதிய நூல்களும் தமிழின் பெருமையை உலகறியச் செய்ததும் என்றுமே காலத்தால் அழியாது.

Related Stories: