மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இன்று முதல் இலவச லட்டு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச லட்டு பிரசாதம் இன்று முதல் வழங்கப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தினம்  20 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகின்றனர். கடந்த அக். 27ம் தேதி தீபாவளி முதல் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென லட்டு விநியோகிப்பது தேதி குறிப்பிடாமல் ஒத்தி  வைக்கப்பட்டது.  தற்போது அறநிலையத்துறை சார்பில் இன்று (நவ. 8) முதல் மீனாட்சியம்மன் கோயிலில் இலவசமாக லட்டு விநியோகிக்கப்படும், லட்டு விநியோக திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலை  10 மணிக்கு துவக்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி கோயில் நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர்.

இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை தக்கார் கருமுத்து கண்ணன், கோயில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் முல்லை ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மீனாட்சி கோயில் ஆடி வீதியில் உள்ள யானை  நிறுத்துமிடம் அருகில் வன்னி விநாயகர் சன்னதி பகுதி கூடத்தில் நவீன கருவிகள் மூலம் லட்டுகள் தயாரிப்பு பணி, இரவு பகலாக நடந்து வருகிறது.   இன்று காலை 10 மணிக்கு மேல், மீனாட்சியம்மன் கோயிலுக்கு சாமி தரிசனத்திற்கு வரும்  பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் 30 கிராம் எடையுள்ள தலா ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது.

Related Stories: