தமிழகத்தை உலுக்கிய கோவை சிறுவர்கள் கொலை வழக்கு: குற்றவாளியின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதோடு, அவரது தம்பியும் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கின் பின்னணி

கடந்த 2010 ஆண்டு கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த சிறுமி முஸ்கான்(11), சிறுவன் ரித்திக்(8) ஆகியோர், வாடகைக் கார் ஓட்டுநர் மோகன் ராஜ் என்பவரால் கடத்திப் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது உடல்கள் பொள்ளாச்சி அருகே கண்டெடுக்கப்பட்டன. போலீஸ் விசாரணையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மோகன்ராஜூம், அவரது நண்பர் மனோகரும் கைது செய்யப்பட்டனர்.

என்கவுண்டர்

இந்த வழக்கில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, குற்றவாளிகளில் ஒருவனான மோகனகிருஷ்ணன், காவல்துறையிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்ற போது என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். அப்போது, பரவலாக பட்டாசு வெடித்துக் கொண்டாடப்பட்டது. மனோகரன் சிறையில் அடைக்கப்பட்டான்.

தூக்குத் தண்டனை

இந்த வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்றம், பள்ளிக் குழந்தைகள் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மனோகரனுக்கு இரட்டை தூக்குத் தண்டனையும், மூன்று ஆயுள் தண்டனையும் விதித்து கடந்த 2012, நவம்பர் 1ல் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து இதே உத்தரவையே சென்னை உயர் நீதிமன்றமும் பின்னர் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியிருந்தது.

மேல்முறையீடு

இதைத்தொடர்ந்து, மனோகரன் தரப்பில், கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த மனுவை நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன், சுபாஷ் ரெட்டி மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஏற்கனவே 2016-ம் ஆண்டில் மரண தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருந்தது.

இந்நிலையில் அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி; அதாவது தனக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க உத்தரவிட வேண்டும் என கூறி மனோகரன் மீண்டும் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன், சுபாஷ் ரெட்டி மற்றும் சூர்யகாந்த் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஏற்கனவே உச்சநீதிமன்ற கீழ் நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் அவருடைய மரண தண்டனையை உறுதி செய்திருக்கிறது; அந்த தீர்ப்பில் எந்த திருத்தத்தையும் செய்ய நாங்கள் விரும்பவில்லை. என்று கூறிய நீதிபதிகள் அவருடைய மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த தீர்ப்பை பொறுத்தவரையில் மனோகரனுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருக்க கூடிய மரண தன்டைனையை தற்போது மீண்டும் உறுதி செய்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தற்போது மனோகரன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அடுத்த கட்டமாக குடியரசு தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இல்லை என்றால் தூக்குத்தண்டனை விரைவில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: