பிஇ தொலைதூர பட்டம் முழுநேர படிப்புக்கு இணையில்லை: ஐகோர்ட் கிளை திட்டவட்டம்

மதுரை: பிஇ தொலைதூர பட்டம், முழு நேர படிப்பிற்கு இணையானது அல்ல என உறுதி கூறியுள்ள ஐகோர்ட் கிளை, தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்தது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் பத்மாவதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: காரியாபட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஓவர்சீயராக கடந்த 2008ல் நியமிக்கப்பட்டேன். இதன்பிறகு தொலைதூர கல்வித்திட்டத்தின் கீழ் பிஇ பட்டம் பெற்றேன். இதனால் உதவி பொறியாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால், தொலைதூர கல்வித்திட்டத்தில் பெற்ற பட்டம் முழுநேர கல்லூரி படிப்புக்கு இணையானது அல்ல எனக்கூறி, எனக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வை ரத்து செய்தனர். இதை எதிர்த்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி என் மனுவை தள்ளுபடி செய்தார்.

தொலைதூர கல்வித்திட்டத்தில் பிஇ பட்டம் பெற்றவர்களுக்காக உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி, ஏஐசிடிஇ மற்றும் யூஜிசி சார்பில் அகில இந்திய அளவில் சிறப்பு தேர்வு நடத்தப்பட்டது. இதில், நான் பங்கேற்று இந்திய அளவில் தேர்ச்சி பெற்றேன். இதை அங்கீகரித்து பட்டம், சான்று வழங்கப்பட்டது. எனவே, நான் தொலைதூர கல்வித்திட்டத்தின் கீழ் பெற்ற பட்டம் தகுதியானது தான். இதை தனி நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, எனக்கு உதவி பொறியாளராக மீண்டும் பணி வழங்க உத்தரவிட வேண்டும்.  

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர், கல்லூரிக்கு நேரடியாக சென்று அவ்வப்போது தேர்வுகள் எழுதி, செய்முறை தேர்வில் பங்கேற்று முறையாக படித்து பட்டம் பெறுவதற்கும், தொலைதூர திட்டத்தில் பட்டம் பெறுவதற்கும் வித்தியாசம் உள்ளது. இதை ஒன்றாக பார்க்க முடியாது. அதே நேரம் உதவி பொறியாளர் பணி என்பது எந்நேரமும், திறமையுடன் கையாள வேண்டியது. இதை ெதாலைதூர திட்டத்தில் பயின்றவர்கள் கையாள்வது சிரமம் தான். அதேநேரம் தொலைதூர திட்டத்தில் பெற்ற பட்டம் முழுநேர படிப்பிற்கு இணையானது அல்ல என்ற அரசாணையை எதிர்த்து மனு செய்யவில்லை. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.

Related Stories: