தேசிய தலைமை ஆசிரியர்கள் திறன் மேம்பாட்டு மாநாட்டில் மத்திய அரசின் இந்தித் திணிப்பு முயற்சியை எதிர்த்து மத்திய அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கடிதம்

சென்னை: இந்தி திணிப்பு முயற்சியில் ஈடுபடும் பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு மத்திய அரசுக்கு கடிதம் அளித்துள்ளார். தேசிய தலைமை ஆசிரியர்களின் தலைமைப் பண்பு மற்றும் திறன் மேம்பாட்டு மாநாட்டில் ஆங்கிலம், இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது என்றும் ஜனவரி 15-ம் தேதி டெல்லியில் நடக்க உள்ள திறன் மேம்பாட்டுக்கான மாநாட்டில் மாநில மொழிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கழக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு மத்திய மனித வளம் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியல் நிஷாங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக டி.ஆர்.பாலு எம்.பி. எழுதியுள்ள கடிதத்தில், அடுத்த ஆண்டு ஜனவரி 15 ம் தேதி முதல் 17 ம் தேதிவரை டெல்லியில் தேசிய பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மாநில மொழிகளைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்து இந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால், தமிழ் போன்ற பிற இந்திய மொழிகளை அறிந்துள்ள ஆசிரியர்கள் தேசிய மாநாட்டில் கலந்து கொள்ளும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. தமிழ் போன்ற பிற இந்திய மொழிகளை அறிந்த ஆசிரியர்களுக்கும் தேசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும்.எனவே, சம்பந்தப்பட்ட தேசிய மாநாட்டினை நடத்தும் தாங்கள்மனிதவளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமைப்பாளர்களுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பித்து  இந்தத் தேசிய மாநாட்டில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளைப் பேசுவோரையும் கலந்து கொள்ளஅனுமதிக்கும்படி தாம் கேட்டுக் கொள்வதாக டி.ஆர்.பாலு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: