ஏர் இந்தியாவை முழுமையாக தனியாருக்கு விற்க அரசு முடிவு: டாடா குழும தலைவர் குழு ஆலோசனை

மும்பை: ஏர் இந்தியாவை முழுமையாக தனியாருக்கு விற்க அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியாவை வாங்குவது தொடர்பாக அந்நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவினரிடம் ஆலோசனை நடத்த உள்ளதாக டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

அரசு விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா தொடர் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதால் அதை விற்க அரசு கடந்த சில ஆண்டுகளாகவே முயற்சித்து வருகிறது.

முன்னதாக ஏர் இந்தியாவின் 76 சதவீத பங்குகளை விற்று விட்டு, 24 சதவீத பங்குகளை மட்டும் தன் வசம் வைத்துக்கொள்ள அரசு திட்டமிட்டது. ஆனால் அதற்குப் பெரும்பாலான நிறுவனங்கள் ஒப்புக்கொள்ளாததால், ஏர் இந்தியாவின் பங்கு விற்பனை நடவடிக்கை தோல்வியடைந்தது. இதையடுத்து அரசு 100 சதவீத பங்குகளை விற்று விடும் முடிவுக்கு வந்தது. தற்போது ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏர் இந்தியா ஜேஆர்டி டாடாவால் டாடா ஏர் சர்வீசஸ் என்ற பெயரில் 1932-ல் தொடங்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு அது அரசு வசம் வந்தது. எனவே தற்போது ஏர் இந்தியா விற்பனைக்கு வருவதால் டாடா குழுமம் ஏர் இந்தியாவை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து டாடா குழுமத் தலைவர் கூறியதாவது, ஏர் இந்தியாவை வாங்குவது குறித்து விஸ்தாரா முடிவு செய்ய வேண்டுமே தவிர, டாடா சன்ஸ் அல்ல என கூறினார். எனவே தற்போது இதுகுறித்து தீர்மானமான முடிவு எதையும் என்னால் கூற முடியாது. ஆனால் டாடா குழுமத்தின் விமான சேவை தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் இருக்கிறது.

ஜெட் ஏர்வேஸை வாங்குவதற்கான முயற்சிகளில் இருந்ததால் ஏர் இந்தியா குறித்து எந்த முடிவுக்கும் வரவில்லை. தற்போது ஏர் இந்தியாவை வாங்குவது குறித்து அதிகாரிகள் குழுவினரிடம் ஆலோசனை செய்ய இருக்கிறேன். டாடா குழுமத்தின் குழு ஏர் இந்தியாவை மதிப்பீடு செய்யும். எனவே எதுவாயினும் தற்போது எந்த முடிவும் தெரிவிக்க முடியாது என என்.சந்திரசேகரன் கூறினார். டாடா குழுமம் தற்போது விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியா ஆகிய விமான சேவை நிறுவனங்களுடன் இணைந்து விமான சேவையில் ஈடுபட்டு வருகிறது. ஏர் இந்தியாவின் உள்நாட்டு விமானசேவை பங்களிப்பு 12 சதவீதமாக உள்ளது.

Related Stories: