மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வேண்டியது பா.ஜவின் பொறுப்பு: சோனியாவை சந்தித்த பிறகு சரத் பவார் பேட்டி

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வேண்டியது பா.ஜ கட்சியின் பொறுப்பு என்று காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பிறகு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார். சோனியா காந்தியை நேற்றிரவு அவரது இல்லத்தில் சரத் பவார் சந்தித்து பேசினார். சுமார் அரை மணிநேரம் நடந்த இந்த சந்திப்பின் போது, மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து இரு தலைவர்களும் தீவிர ஆலோசனை நடத்தினர். பா.ஜனதா கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறும் பட்சத்தில் அந்த கட்சி ஆட்சியமைக்க ஆதரவளிப்பது குறித்து சரத் பவாரும் சோனியா காந்தியும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

இச்சந்திப்புக்கு பிறகு சரத் பவார் கூறுகையில், ‘‘மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரசிடம் இதுவரை சிவசேனா ஆதரவு கோரவில்லை. ஆனால், எதிர்வரும் நாட்களில் என்ன நடக்கும் என்பதை என்னால் கூற முடியாது. மகாராஷ்டிராவை பொறுத்தவரை இப்போதைக்கு ஆட்சியமைக்க வேண்டிய பொறுப்பு பா.ஜனதாவுக்குத்தான் உள்ளது. காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்துள்ளன. மீண்டும் சோனியா காந்தியை விரைவில் சந்தித்து பேசுவேன்’’ என்றார்.

Related Stories: