அரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி சாவு

சண்டிகர்: அரியானாவின் கர்னால் மாவட்டம் கராண்டா கிராமத்தைச் சேர்ந்த சிவானி (5) என்ற சிறுமி நேற்று முன்தினம் மாலை, தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தாள். திடீரென மாயமான சிறுமியை, அவரது பெற்றோர் எல்லா இடங்களிலும் தேடினர். இருந்தாலும், சிறுமி கிடைக்கவில்லை.      விவசாய தோட்டத்தில் அவர்கள் வீடு அமைந்துள்ளது. அங்கு ஏற்கனவே ஆழ்துளை கிணறு ஒன்று தோண்டப்பட்டு மூடப்படாமல் இருந்தது. அதில் சிவானி விழுந்திருக்கலாமோ என்று பெற்றோர்கள் சந்தேகப்பட்டனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள், கேமராவை உள்ளே அனுப்பி சோதனையிட்டனர். இதில் சிறுமியின் பாதம் தெரிந்தது. இதையடுத்து, சிறுமி பயப்படாமல் இருப்பதற்காக, அவளது பெற்றோரை வைத்து பேச வைத்தனர். இதன் மூலம் சிறுமி தைரியம் பெறுவாள் என்று மீட்பு படையினர் நினைத்தனர். இதேபோல் சிறுமிக்கு தேவையான ஆக்சிஜனை டியூப் மூலம் செலுத்தினர்.

இதையடுத்து சிறுமியை மீட்பதற்காக, உள்ளூர் மக்கள் உதவியுடன் ஆழ்துளை கிணறுக்கு அருகிலேயே பொக்லைன் இயந்திரத்தை கொண்டு பள்ளம் தோண்டினர். மருத்துவக் குழுவினரும், அங்கு தயார் நிலையில் இருந்தனர். குழந்தை 20 அடி ஆழத்தில் விழுந்ததாக அறியப்பட்டது. நேரம் செல்ல செல்ல குழந்தை 50 அடி ஆழத்துக்கு சென்றுவிட்டது. 150 அடி ஆழத்தில் குழி இருந்ததால், குழந்தையை மீட்பது தொடர்பாக பெற்றோர் அச்சம் அடைந்தனர். மாவட்ட எஸ்பி சுரேந்திர் சிங் தலைமையில், நள்ளிரவு முதல் மீட்புப்பணி நடைபெற்ற நிலையில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நேற்று அதிகாலை சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அவர்களும் இந்த மீட்பு பணியில் இறங்கி பணியை தீவிரப்படுத்தினர். ஒருவழியாக 18 மணி நேர போராட்டத்துக்கு பின், நேற்று காலை 7 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் இருந்து சிறுமி மீட்கப்பட்டாள். அவள் மயங்கிய நிலையில் இருந்ததால் உடனடியாக சிறுமியை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால், சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  கடந்த வாரம் மணப்பாறையில் உள்ள நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: