பார்முலா 1 கார் பந்தயம் ஆறாவது முறையாக ஹாமில்டன் உலக சாம்பியன்

ஆஸ்டின்: பார்முலா 1 கார் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லூயிஸ் ஹாமில்டன் 6வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.நடப்பு சீசனின் 20வது பந்தயமாக நடைபெற்ற யுஎஸ் கிராண்ட் பிரீ தொடரில் மெர்சிடிஸ் அணியின் வால்டெரி போட்டாஸ் 1 மணி, 33 நிமிடம், 55.653 விநாடியில் 56 சுற்றுகளைப் பூர்த்தி செய்து முதலிடம் பிடித்தார். சக வீரர் லூயிஸ் ஹாமில்டன் (+4.148 விநாடி) 2வது இடமும், ரெட் புல் ரேசிங் ஹோண்டா அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (+5.002 விநாடி) 3வது இடமும் பிடித்தனர்.

பெராரி அணி வீரர் சார்லஸ் லெக்லர்க் (+52.239 விநாடி) 4வதாக வந்தார். இந்த பந்தயத்தின் முடிவில் டிரைவர்களுக்கான புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் லூயிஸ் ஹாமில்டன் (381 புள்ளி) 6வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வெல்வதை உறுதி செய்தார். வால்டெரி போட்டாஸ் (314 புள்ளி), சார்லஸ் லெக்லர்க் (249) அடுத்த இடங்களில் உள்ளனர்.இன்னும் 2 பந்தயங்கள் எஞ்சியுள்ள நிலையில், உலக சாம்பியனாகி சாதனை படைத்துள்ள ஹாமில்டனுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன. மைக்கேல் ஷூமேக்கர் 7 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நிலையில், ஹாமில்டன் அவருக்கு அடுத்த இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

Related Stories: