இந்தியாவுடன் முதல் டி20 போட்டி வங்கதேசத்துக்கு 149 ரன் இலக்கு

புதுடெல்லி: இந்திய அணியுடனான முதல் டி20 போட்டியில், வங்கதேச அணிக்கு 149 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா வந்துள்ள வங்கதேச அணி 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. டாசில் வென்ற வங்கதேச அணி கேப்டன் மகமதுல்லா முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணியில் ஷிவம் துபே (26 வயது), வங்கதேச அணியில் முகமது நயிம் (20 வயது) அறிமுக வீரர்களாக இடம் பெற்றனர்.கேப்டன் ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் இருவரும் இந்திய இன்னிங்சை தொடங்கினர். ரோகித் 9 ரன் மட்டுமே எடுத்து ஷபியுல் இஸ்லாம் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். அடுத்து தவானுடன் லோகேஷ் ராகுல் இணைந்தார். ராகுல் 15 ரன் எடுத்து வெளியேற, அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக 22 ரன் (13 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அமினுல் இஸ்லாம் பந்துவீச்சில் நயிம் வசம் பிடிபட்டார்.

அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷிகர் தவான் 41 ரன் எடுத்து (42 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். அறிமுக வீரர் ஷிவம் துபே 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் அபிப் உசேன் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். ரிஷப் பன்ட் 27 ரன்னில் பெவிலியன் திரும்பினார் (26 பந்து, 3 பவுண்டரி).இந்தியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன் குவித்தது. குருணல் பாண்டியா 15 ரன் (8 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்), வாஷிங்டன் சுந்தர் 14 ரன்னுடன் (5 பந்து, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச பந்துவீச்சில் ஷபியுல் இஸ்லாம், அமினுல் இஸ்லாம் தலா 2, அபிப் உசேன் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 149 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது.

Related Stories: