நாளை பத்மநாப சுவாமி கோயில் ஆறாட்டு விழா திருவனந்தபுரம் ஏர்போர்ட் 5 மணிநேரம் மூடப்படுகிறது

திருவனந்தபுரம்: பத்மநாபசுவாமி கோயில் ஆறாட்டு விழாவை முன்னிட்டு நாளை திருவனந்தபுரம்  சர்வதேச விமான நிலையம் 5 மணிநேரம் மூடப்படுகிறது. அந்த நேரத்தில்  இயங்கும் விமானங்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிரசித்திப்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் ஐப்பசி திருவிழா ஆண்டுதோறும்  வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இவ்வாண்டு ஐப்பசி திருவிழா கடந்த  29ம் தேதி தொடங்கியது. நிறைவு நாளான நாளை ஆறாட்டு விழா நடக்கிறது. அன்று மாலை 4 மணியளவில் கோயிலில் இருந்து சுவாமி விக்ரகத்துடன்  ஆறாட்டு ஊர்வலம் சங்குமுகம் கடற்கரைக்கு செல்லும்.

இந்த ஊர்வலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலைய ஓடுபாதை வழியாக செல்லும். விமான  நிலையம் வருவதற்கு முன்பே அந்த வழியாகத்தான் ஊர்வலம் சென்று கொண்டிருந்தது.  விமான நிலையம் வந்த பின்னரும் அந்த பாதை மாற்றப்படவில்லை. எனவே ஆறாட்டு  ஊர்வலம் செல்லும் சமயத்தில் இயங்கும் விமானங்களின் நேரங்கள் மாற்றப்படுவது வழக்கம். இந்த நிலையில் நாளை ஆறாட்டு ஊர்வலம் செல்ல  உள்ளதால் அன்று மாலை 4 மணி முதல் 9 மணி வரை 5 மணிநேரம் மூடப்படும். இந்த சமயத்தில் வழக்கமாக இயக்கப்படும் ஏர் இந்தியாவின் 8 விமானங்கள் உட்பட 22  விமான சர்வீஸ்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

அன்று இரவு 8.40 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து ஷார்ஜாவுக்கு செல்லும் ஏர் இந்திய விமானம் இரவு 10 மணிக்கு புறப்படும். அதுபோல இரவு 7.20க்கு புறப்பட வேண்டிய டெல்லி விமானம் 10 மணிக்கும், 8.15 மும்பை  விமானம் 9.55க்கும் புறப்படும். மாலை 5.15 அபுதாபி விமானம் இரவு 9.05க்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: