சினிமாவில் அளப்பரிய பங்களிப்பை பாராட்டி ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

புதுடெல்லி: நடிகர் ரஜினிகாந்த்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை மத்திய தகவல் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மத்திய தகவல் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகம் திரைப்பட துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருதினை நடிகர் ரஜினிகாந்த்துக்கு நேற்று அறிவித்தது. இதனை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது ரஜினிக்கு வழங்கப்படுகிறது. கோவாவில் சர்வதேச இந்திய திரைப்பட விழா வரும் 20 முதல் 28ம் தேதி வரை 50வது சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில் சீனா, ஜப்பான், அமெரிக்கா ஹாலிவுட் என பல்வேறு நாடுகளை சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. மொத்தமாக  76 நாடுகளிலிருந்து 26 பொழுதுபோக்கு படங்கள் 15 சமூக படங்கள் மற்றும் 20 சிறந்த திரைப்படங்கள், குழந்தைகளுக்கான படம் உள்ளிட்ட 12  படங்களும் திரையிடப்படுகின்றன. இவற்றில் தேர்வு செய்யப்பட்ட தமிழ், இந்தி உள்ளிட்ட மாநில மொழிப்படங்களும் திரையிடப்படுகின்றன. 10 ஆயிரம் பார்வையாளர்கள் இவ்விழாவில் பங்கேற்கிறார்கள்.

 ரஜினிகாந்த் கடந்த 1975ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். இயக்குனர் கே.பாலசந்தர் இவரை அறிமுகப்படுத்தினார். கடந்த 44 ஆண்டுகளில் தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காளம் என 167 படங்களில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். கடந்த 2000ம் ஆண்டு பத்ம பூஷண் விருதும், 2016ல் பத்ம விபூஷண் விருதும் மத்திய அரசால் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டுதான், வாழ்நாள் சாதனையாளர் விருது மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு வழங்கப்பட்டது. 2வது நபராக இந்தாண்டு ரஜினிகாந்துக்கு வழங்கப்படுகிறது.  ஏற்கனவே தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது (1984), எம்ஜிஆர் விருது (1989), மகாராஷ்டிரா அரசால் ராஜ்கபூர் விருது (2007), தமிழக அரசால் எம்ஜிஆர் - சிவாஜி விருது (2011), சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் செஞ்சூரி விருது (2014), ஆந்திரா அரசால் என்டி ராமராவ் விருது (2016) உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர பிரபல சேனல்கள், திரைப்பட அமைப்புகள், இதழ்கள் பல்வேறு விருதுகளை வழங்கி உள்ளன. இவர் நடித்த முள்ளும் மலரும், மூன்றுமுகம், முத்து, படையப்பா, சந்திரமுகி ஆகிய படங்களுக்கு தமிழக அரசின் சிறந்த திரைப்படத்துக்கான விருது வழங்கப்பட்டது. வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் ரஜினிக்கு, அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

* கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.

* மத்திய அரசால் கடந்தாண்டு இவ் விருது அறிமுகப்படுத்தப்பட்டது.

* இந்தி நடிகர் அமிதாப்பச்சன் முதல்முறையாக இவ் விருதை பெற்றார்.

* 2வது நபராக இந்தாண்டு ரஜினிகாந்த் பெறுகிறார்.

Related Stories: