ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச ஆளுநர் பதவியேற்பில் பங்கேற்ற எம்பி நீக்கம் : மெகபூபா அதிரடி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மக்கள் ஜனநாயக கட்சி எம்பி நஜீர் அகமது லாவே, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய பாஜ அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி உத்தரவிட்டது. இதற்கு, இம்மாநிலத்தை சேர்ந்த முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி போன்றவை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் செயல்பாட்டுக்கு வந்தன. இவற்றின் துணை நிலை ஆளுநர்களும் அன்றைய தினம் பதவியேற்றனர்.

இதில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக ஜி.சி.முர்மு பதவியேற்ற விழாவில், மக்கள் ஜனநாயக கட்சியின் மாநிலங்களவை எம்பி.யான  நஜீம் அகமது லாவே பங்கேற்றார். இதனால், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக அவரை கட்சியில் இருந்து நீக்கி, மெகபூபா முப்தி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மக்கள் ஜனநாயக கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், `காஷ்மீர் துணை நிலை ஆளுநர் பதவியேற்பு விழாவில் கட்சி கட்டுப்பாட்டை மீறி பங்கேற்றதால் எம்பி நஜீம் அகமது லாவே, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார். முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் கொண்டு வந் தபோதும் நஜீம் இதுபோன்று கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: