ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை செலுத்தும் ‘சூப்பர்’ லாஞ்சர் சோதனை வெற்றி : வடகொரியா அட்டகாசம்

சியோல்: வடகொரியா அடிக்கடி அணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்து வந்தது. இதனால், அதன் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில்  வடகொரியா அதிபர் ஜிம் ஜாங் உன், அமெரிக்கா அதிபர் டிரம்ப் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வடகொரியா அணு ஆயுதத்தை தயாரிக்காது என டிரம்பிடம் ஜாங் உறுதியளித்தார். இதற்காக, தங்கள் நாட்டில் இருந்த சில அணு ஆயுத தயாரிப்பு மையங்களை வடகொரியா அழித்தது. இதற்கு கைமாறாக, பொருளாதார தடைகளை நீக்கும்படி அமெரிக்காவிடம் கேட்டது. ஆனால், டிரம்ப் அதை நிராகரித்தார். இது தொடர்பாக,  வியட்நாமின் ஹனோய் நகரில் இரு நாட்டு அதிபர்கள் இடையே நடைபெற்ற 2வது பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாமல் நிறைவடைந்தது.

இதைத் தொடர்ந்து மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனையில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 2ம் தேதி கடலில் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. நேற்று முன்தினம் வடகொரியா தெற்கு பியாங்கான் மாகாணத்தில் இருந்து குறுகிய தூரம் சென்று தாக்கும் 2 ஏவுகணைகளை சோதித்ததாக தென்கொரிய ராணுவம் குற்றம்சாட்டியது. இந்த ஏவுகணைகள் 370 கிமீ தொலைவு சென்று தாக்கும் திறனுடையது. இந்நிலையில், ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை ஏவ உதவும் மிகப்பெரிய ராக்கெட் லாஞ்சரை வடகொரியா நேற்று வெற்றிகரமாக சோதித்தது. அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில் இது நடத்தப்பட்டது. இது, அமெரிக்கா, தென்கொரியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: