17 அடுக்குமாடிகளுடன் டெல்லி காவல் துறையின் புதிய தலைமை அலுவலக கட்டிடம் : அமித்ஷா திறந்து வைத்தார்

புதுடெல்லி: ஜெய் சிங் மார்க்கில் கட்டப்பட்டுள்ள டெல்லி காவல்துறையினருக்கான புதிய 17 மாடிகளை கொண்ட தலைமை அலுவலக கட்டிடத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று திறந்து வைத்தார். டெல்லி  போலீஸ் தலைமைகயம் முதன் முதலாக காலனித்துவ ஆட்சி காலத்தில் கடந்த 1912ம்  ஆண்டு காஷ்மீரி கேட் பகுதியில் செயல்பட்டு வந்தது. அதன்பின், இந்தியா  சுதந்திரம் அடைந்த பின்னர் காஷ்மீரி கேட் பகுதிக்கு கடந்த 1970ம் ஆண்டு  மாற்றப்பட்ட நிலையில்,  கடந்த 1976ம் ஆண்டில்  காஷ்மீரி கேட்  பகுதியிலிருந்து ஐடிஓ பகுதியில் தற்போதுள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான  கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. வருமான வரித்துறை அலுவலகம் உள்ள இந்த பகுதியில் கடந்த 44 ஆண்டுகளாக  இங்கு செயல்பட்டு வந்தது. இந்நிலையில்,  இந்தியாவின் முதலாவது உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் 144 வது  பிறந்த தினத்தையொட்டி, நேற்று ஜெய்சிங் மார்க்கில் டெல்லி காவல் துறையின்  புதிய கட்டிடத்தை தற்போதைய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்.  இதையடுத்து,   டெல்லி போலீஸ் தலைமை அலுவலகம் நேற்று புதிதாக திறக்கப்பட்ட  17 மாடி கட்டிடத்துக்கு மாற உள்ளது.

இதில், டெல்லி போலீஸ் கமிஷனர்  அமுல்யா பட்நாயக், மூத்த சிறப்பு கமிஷனர்கள், மற்றும் இணை கமிஷனர்கள்  அந்தஸ்துள்ள அதிகாரிகள் ஆகியோர் இங்கு இடம் பெயர உள்ளனர். இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் அமித்ஷா உடன் உள்தறை இணையமைச்சர் ஜி கிஷன் ரெட்டியுடன் பங்கேற்றார். புதிதாக  திறக்கப்பட்ட இந்த கட்டிடம் அரசு-தனியார் கூட்டு பங்களிப்பில்  கட்டப்பட்டது. இதில், ஆடிட்டோரியம், போலீஸ் மியூசியம், சிறப்பு ஆலோசனை  கூட்டத்திற்கான அறை மற்றும் நிலநடுக்கத்தை தாங்கும் வசதி உள்ளிட்டவை உள்ளன.  இந்த கட்டிட வளாகத்திற்குள் சுமார் 1000 கார்களை ஒரே சமயத்தில் பார்க்கிங்  செய்யும் வசதியும் உள்ளது. பல குடியிருப்புகளும் இங்கு கட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டு பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: அமித்ஷா

கட்டிடத்தை  திறந்து வைத்து அமித்ஷா பேசுகையில், “மோடி தலைமையிலான அரசு உள்நாட்டு  பாதுகாப்புக்கு முதலில் முன்னுரிமையை வழங்கி வருகிறது. எல்லையில்  பாதுகாப்பை பலப்படுத்தவும், கள்ள நோட்டுக்கள் இந்தியாவுக்குள் ஊடுருவுவதை  தடுக்கவும் ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்”என்றார். முன்னதாக, கடந்த 2001 நாடாளுமன்ற தாக்குதலில் உயிர் இழந்த  டெல்லி காவல்துறை ஊழியர்களுக்கும், பட்லா ஹவுஸ் மோதலின் போது கொல்லப்பட்ட  இன்ஸ்பெக்டர் எம் சி ஷர்மாவுக்கும் அமித்ஷா அஞ்சலி செலுத்தினார்.

Related Stories: