2வது டி20 போட்டியிலும் இலங்கை ஏமாற்றம்: தொடரை வென்றது ஆஸ்திரேலியா

பிரிஸ்பேன்: இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில், 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா  2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 134 ரன் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2வது டி20 போட்டி பிரிஸ்பேன் நகரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது. தனுஷ்கா குணதிலகா, குசால் மெண்டிஸ் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினர். குசால் மெண்டிஸ் ஒரு ரன் மட்டுமே எடுத்து ரன் அவுட்டானார். அதன் பிறகு வந்தவர்கள் ஆஸ்திரேலிய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இலங்கை அணி19 ஒவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 117 ரன் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் குசால் பெரேரா 27 ரன், தொடக்க ஆட்டக்காரர் குணதிலகே 21, அவிஷ்கா பெர்னாண்டோ 17,  வனிந்து ஹசரங்கா, இசுரு உடனா, லக்‌ஷன் சந்தகன் ஆகியோர் தலா 10 ரன் எடுத்தனர். நுவன் பிரதீப் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் பில்லி ஸ்டான்லேக், கம்மின்ஸ், ஆஷ்டன் ஏகார், ஆடம் ஸம்பா ஆகியோர் தலா  2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு  ஆரம்பத்திலேயே அதிர்ச்சி தந்தார் இலங்கை கேப்டன் லசித் மலிங்கா. அவர் முதல் ஓவரிலேயே கேப்டன் ஆரோன் பிஞ்ச்சை டக் அவுட்டாக்கினார்.

எனினும், 2வது விக்கெட்டுக்கு டேவிட் வார்னர் - ஸ்டீவன் ஸ்மித் ஜோடி அதிரடியாக விளையாடி இலங்கை பந்துவீச்சை சிதறடித்தது. இருவரும் அரை சதம் விளாசி அசத்தினர். ஆஸ்திரேலியா 13.1 ஓவரில்  ஒரு விக்கெட்  இழப்புக்கு 118 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. டேவிட் வார்னர் 60 ரன் (41 பந்து, 9 பவுண்டரி), ஸ்டீவன் ஸ்மித் 53 ரன்னுடன் (36 பந்து, 6 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். வார்னர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.  ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், 3வது மற்றும் கடைசி டி20 போட்டி  மெபோர்னில் நாளை நடைபெறுகிறது.

Related Stories: