கேரள வனப்பகுதியில் மீண்டும் துப்பாக்கி சண்டை மேலும் ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை

பாலக்காடு: கேரள மாநிலம் அட்டப்பாடி வனத்தில் நேற்றும் தண்டர்போல்ட் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக் கொல்லப்பட்டார். தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே மஞ்சகண்டியூர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் முகாமிட்டு இருப்பதாக கேரள தண்டர்போல்ட் போலீசாருக்கு கடந்த வாரம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தண்டர்போல்ட் போலீசார் வனத்துறையினருடன் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் அதிகாலை மாவோயிஸ்ட்கள் முகாமிட்டிருந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.

அப்போது, மாவோயிஸ்ட்கள் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தி தப்பிக்க முயன்றனர். தண்டர்போல்ட் போலீசாரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் மாவோயிஸ்ட்களான புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக், கர்நாடக மாநிலம் சிருங்கேரியைச் சேர்ந்த ஸ்ரீமதி, சித்தமங்கலத்தைச் சேர்ந்த சுரேஷ் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். மேலும் இருவர் தப்பி ஓடினர். இதையடுத்து, தப்பி ஓடியவர்களை அங்கேயே முகாமிட்டு தேடினர். நேற்று பிற்பகலில் மாவோயிஸ்டுகளில் ஒருவர் வனப்பகுதியில் பதுங்கியிருந்தார். இதனை பார்த்துவிட்ட ஒரு மாவோயிஸ்ட், தண்டர்போல்ட் போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார். பதிலுக்கு போலீசாரும் திருப்பி சுட்டனர். இதில் அந்த மாவோயிஸ்ட் சுட்டுக்கொல்லப்பட்டார்.

 

இதைத்தொடர்ந்து, அவரை பற்றி விசாரித்தில், தமிழகத்தைச் சேர்ந்த மணிவாசகம் என்பது தெரியவந்தது. தொடர்ந்து வனப்பகுதியில் தண்டர்போல்ட் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூட்டில் பலியான சுரேஷ், ஸ்ரீமதி, கார்த்திக் ஆகியோரின் உடல்கள் கேரள மாநிலம் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன. மணிவாசகத்தின் உடல் இன்று திருச்சூருக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது.

கூடுதல் போலீசார் குவிப்பு

கடந்த சில வருடங்களாக கேரள மாநிலம் மலப்புரம், வயநாடு, இடுக்கி, பாலக்காடு, அட்டப்பாடி, ஆகிய பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிக அளவில் இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக சைலன்ட்வேலி, மஞ்சகண்டியூர், தாவளம், மல்லீஸ்வரர்முடி, நிலம்பூர், கூடலூர் ஆகிய பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் முகாமிட்டு ஆயுதப்பயிற்சி பெற்று வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜாமீனில் வந்து ஆயுதப்பயிற்சி

துப்பாக்கிச் சூட்டில் பலியான புதுக்கோட்டை கார்த்திக்  தீவிரவாத செயல்களில் ஈடுபாடு உள்ளவராக இருந்தார். அதன்பேரில் தமிழக போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்து இருந்தனர். பின்னர் கார்த்திக் ஜாமீனில் வந்திருந்தார். தொடர்ந்து தலைமறைவான அவர் மாவோயிஸ்ட் கும்பலுடன் வனப்பகுதியில் தங்கி ஆயுத பயிற்சி பெற்றுள்ளார்.

Related Stories: