இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி கொடுக்கப்படும் என சிவசேனாவுக்கு பாஜ வாக்குறுதி தரவில்லை: 5 ஆண்டுகளுக்கு நானே முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் அறிவிப்பு

மும்பை: ‘‘இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி கொடுக்கப்படும் என்று சிவசேனாவுக்கு வாக்குறுதி அளிக்கப்படவில்லை. அடுத்த 5 ஆண்டுகளுக்கு நான்தான் மகாராஷ்டிரா முதல்வராக பொறுப்பு வகிப்பேன்.’’ என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் உறுதியாக தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் 288 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பா.ஜனதா 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களையும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 44 இடங்களையும் கைப்பற்றின. ஆளும் பா.ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் உள்ள போதிலும், இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி, அமைச்சரவையில் சமபங்கு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து சிவசேனா முரண்டு பிடித்து வருகிறது.

இருகட்சிகளுக்கும் தலா இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி, அமைச்சரவை சரிபாதி பதவிகள் என மக்களவைத் தேர்தலின் போதே உடன்பாடு செய்து கொள்ளப்பட்டதாகவும், அதன்படி பா.ஜனதா எழுத்துப்பூர்வமாக இப்போது ஒப்பந்தம் செய்து கொண்டால்தான் பா.ஜனதா தலைமையில் ஆட்சியமைக்க ஆதரவு அளிப்போம் என சிவசேனா கூறி வருகிறது. ஆனால், சிவசேனாவின் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ள பா.ஜனதா திட்டவட்டமாக மறுத்து வருகிறது. தேவேந்திர பட்நவிஸ் தான் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்று அக்கட்சி உறுதியாக கூறி வருகிறது. இதனால், மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவியேற்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று தனது அரசு இல்லமான ‘வர்ஷா’வில் பட்நவிஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது: மக்களவைத் தேர்தலுக்காக பா.ஜனதாவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்தபோது மகாராஷ்டிராவில் அடுத்து அமையும் புதிய அரசில் இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி வழங்கப்படும் என்று சிவசேனாவுக்கு எவ்விதமான வாக்குறுதியும் கொடுக்கப்படவில்லை. அடுத்த முதல்வராக நான்தான் பதவியேற்க இருக்கிறேன். 5 ஆண்டுகளுக்கு நானே முதல்வர் பதவியில் நீடிப்பேன். இதில் எந்த மாற்றமும் கிடையாது.

பா.ஜனதா தலைமையில் அடுத்து அமையவிருக்கும் ஆட்சி நிலையானதாகவும் செயல்மிக்கதாகவும் இருக்கும். புதன் கிழமையன்று (இன்று) பா.ஜனதா சட்டப்பேரவைக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் அடுத்த முதல்வர் தேர்வு செய்யப்படுவார். நான்தான் அடுத்த முதல்வர் என பிரதமர் நரேந்திர மோடியும் பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷாவும் ஏற்கனவே அறிவித்து விட்டதால் நாளை(இன்று) நடைபெறும் புதிய எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் சம்பிரதாயமான ஒன்றாகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, அமித் ஷா இன்று ஒருநாள் பயணமாக மும்பைக்கு வருகிறார். அவரது முன்னிலையில் நடைபெறும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக தேவேந்திர பட்நவிஸ் தேர்வு செய்யப்படுகிறார். அமித் ஷா தனது மும்பை பயணத்தின் போது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது உத்தவ் தாக்கரே மீது அமித் ஷா கடும் அதிருப்தியில் இருப்பதால் அவரை அமித் ஷா சந்தித்து பேசுவாரா என்பதை உறுதிப்படுத்த மாநில பா.ஜனதா தலைவர்கள் மறுத்து விட்டனர்.

‘மகாராஷ்டிராவில் துஷ்யந்த் இல்லை’

சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரும். மாநிலங்களவை எம்பி.யுமான சஞ்சய் ராவுத், மும்பையில் நேற்று அளித்த பேட்டி: சிவசேனாவுக்கு பதவி பசி கிடையாது. உண்மையான, நேர்மையான அரசியலை நடத்தவே விரும்புகிறது. எங்களுக்கு வேறு மாற்று வழிகளும் உள்ளன என கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே ஏற்கனவே கூறியிருக்கிறார். ஆனால், மாற்றும் ஏற்பாடுகளை ஏற்றுக் கொண்டு பாவம் செய்ய நாங்கள் விரும்பவில்லை. மகாராஷ்டிராவில் துஷ்யந்த்தும் இல்லை அவரது தந்தை சிறையிலும் இல்லை. அரியானாவில் ஆட்சியை கைப்பற்றுவதற்காக ஜேஜேபி. கட்சித் தலைவர் துஷ்யந்தை பா.ஜனதா வளைத்து அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டதை மறைமுகமாக குறிப்பிடும் வகையில் ராவுத் இதை கூறினார்.

வீடியோ ஆதாரம் சிவசேனா அதிரடி

முதல்வர் பதவியை வழங்குவதாக உறுதி அளிக்கவில்லை என்று பட்நவிஸ் கூறிய சிறிது நேரத்துக்குள், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு மிகவும் நெருக்கமானவரான ஹர்சல் பிரதான், சமூக வலைதளங்களில் ‘வாக்குறுதியை நினைத்து பாருங்கள்’ என்ற பெயரில் ஒரு வீடியோ காட்சியை வெளியிட்டார். இந்தாண்டு பிப்ரவரி 18ம் தேதி எடுக்கப்பட்ட அதில், பட்நவிஸ் மராத்தியில் அளிக்கும் பேட்டி இடம் பெற்றுள்ளது. அதில் அவர், ‘மகாராஷ்டிராவில் நாங்கள் (பாஜ- சிவசேனா) ஆட்சிக்கு வந்தால், பதவிகளையும், பொறுப்புகளையும் சம அளவில் பகிர்ந்து கொள்வோம்’ என்று கூறுகிறார்.

தேசியவாத காங்.மாற்று யோசனை

தேசியவாத காங்கிரஸ் தகவல் தொடர்பாளர் நவாப் மாலிக் நேற்று அளித்த பேட்டியில், ‘‘பட்நவிசை ஆட்சி அமைக்க, அடுத்த சில நாட்களில் ஆளுநர் அழைப்பு விடுக்கலாம். அந்த பதவியேற்பு விழாவில், சிவசேனாவை சேர்ந்தவர்களும் பதவி ஏற்பார்களா என்பது தெரியவில்லை. எப்படி இருந்தாலும், பதவியேற்ற 15 நாட்களுக்குள் பட்நவிஸ் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அவர் பெரும்பான்மை நிரூபிக்க தவறும் பட்சத்தில், மாற்று அரசு அமைப்பதற்கான வழிமுறைகளை தேசியவாத காங்கிரஸ் பற்றி யோசிக்கும்,’’ என்றார்.

Related Stories: