வர்த்தக நிறுவனங்களுக்கு ஆதரவாக சாலையை ஆக்கிரமித்து மழைநீர் கால்வாய் பணி: நங்கநல்லூரில் அவலம்

ஆலந்தூர்: நங்கநல்லூர் பிரதான சாலைகளில் ஏற்கனவே உள்ள பழுதடைந்த மழைநீர் கால்வாயை இடித்து அகற்றாமல், சாலையை ஆக்கிரமித்து புதிதாக கால்வாய் பணி மேற்கொள்ளப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். சென்னை நங்கநல்லூர் 5வது பிரதான சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. இச்சாலையில், பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய், தற்போது சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், தூந்து  கிடப்பதால் மழைக்காலங்களில் நீரோட்டம் தடைபடும் நிலை உள்ளது.எனவே, பழைய கால்வாயை இடித்து அகற்றிவிட்டு, புதிய கால்வாய் அமைக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்பேரில், ஆலந்தூர் 12வது மண்டல மாநகராட்சி சார்பில், மேற்கண்ட சாலையில் புதிய  மழைநீர் கால்வாய்   பணிக்காக டெண்டர் விடப்பட்டது. இந்த மழைநீர் கால்வாய் அமைப்பதற்கான டெண்டரை எடுத்தவர், அங்குள்ள பழைய மழைநீர் கால்வாயை  உடைத்து அகற்றிவிட்டு, புதிய கால்வாய் பணி செய்யாமல், ஏற்கனவே உள்ள கால்வாய் பக்கத்திலேயே, சாலையை உடைத்து  மற்றொரு பள்ளம் தோண்டி  மழைநீர் கால்வாய் அமைத்து வருகிறார்.

இதனால் சாலை குறுகலாக மாறியுள்ளது.  மேலும் இந்த கால்வாய் நேராக செல்லாமல் வளைந்து நெளிந்து அமைக்கப்பட்டு வருகிறது. மனம் போன போக்கில் கட்டப்படும் இந்த கால்வாய் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள்  பார்வையிடுவதில்லை. அதுமட்டுமினறி இந்த கால்வாய் கட்டுமான பணிக்கு தரமற்ற இரும்பு கம்பிகளை பயன்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.அதேபோல், நங்கநல்லூர் 4வது பிரதான சாலையிலும் பிளாட்பாரத்தின் கீழ்  உள்ள மழைநீர் கால்வாயை உடைத்து அகற்றாமல், அங்குள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு ஆதரவாக, சாலையை ஆக்கிரமித்து மழைநீர் கால்வாய்  பணி நடந்து  வருகிறது. இதனால், சாலை குறுகி  போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘மேற்கண்ட இரண்டு சாலைகளிலும் ஏற்கனவே உள்ள பழைய கால்வாய்களை உடைத்து அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய கால்வாய் கட்டுமான பணிகளை மேற்கொண்டு இருக்க வேண்டும்.  ஆனால், ஒப்பந்ததாரர் அங்குள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு ஆதரவாக சாலையை ஆக்கிரமித்து கால்வாய் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால், வரும் காலங்களில் பழைய கால்வாய் தூர்ந்து, அந்த இடம் தனியார் வசம் செல்லும் நிலை உள்ளது.  மேலும், சாலை குறுகி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட மாநகராட்சி பொறியாளர்கள்  இந்த கால்வாய் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு, தரமாகவும், முறையாகவும் அமைக்க உத்தரவிட வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: