மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வீட்டில் காளிபூஜை: ஆளுநர் பங்கேற்பு

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது வீட்டில் நேற்று முன்தினம் காளி பூஜை செய்தார். இதில் ஆளுநர் கலந்து கொண்டார். இந்தியாவின் கிழக்கு மாநிலங்களான மேற்கு வங்கம், ஒடிசா, திரிபுரா போன்ற மாநிலங்களில் காளி பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. வங்க நாட்காட்டியில் கார்த்திகை மாதம் (தமிழ் நாள்காட்டியில் ஐப்பசி) அமாவாசை தினத்தில் காளிபூஜை  கொண்டாடப்படும். இதன்படி, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வீட்டில் நேற்று முன்தினம் இரவு காளி பூஜை நடந்தது. மம்தா பானர்ஜி மற்றும் அவரது நெருங்கிய உறவினரும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியுமான அபிஷேக் பானர்ஜி ஆகியோர் இந்த பூஜையை நடத்தினர். இந்த பூஜைக்காக மம்தா நாள் முழுவதும் விரதம் இருந்தார். பூஜையில் பங்கேற்க மம்தா அழைப்பை ஏற்று மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தான்கர் தனது மனைவியுடன் வந்திருந்தார். அவரை மம்தா வரவேற்றார். திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய தலைவர்களும் பூஜையில் கலந்து கொண்டனர் பூஜை முடிந்த பிறகு மம்தா, அபிஷேக் பானர்ஜி மற்றும் சில திரிணாமுல் கட்சி தலைவர்களுடனும் ஆளுநர் உரையாடினார்.

 இதுகுறித்து ஆளுநர் கூறுகையில், ‘‘இங்கு இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. பலரை இங்கு சந்தித்தேன். அவர்களுடன் உரையாடினேன். இங்கு ஒலிக்கப்பட்ட பாடல்கள் முதல்வர் மம்தா பானர்ஜி எழுதியவை. அந்த பாடல்கள் அடங்கிய சிடியை வழங்குமாறு மம்தாவிடம் நான் கேட்டுக்கொண்டுள்ளேன்’’ என்றார். கொல்கத்தாவில் அரசு சார்பில் சமீபத்தில் துர்கா பூஜை விழா நடந்தது. அதற்கு ஆளுநர் ஜெகதீப் தான்கர் வந்திருந்தார். அதில் தனக்கு இருக்கைகள் சரியான முறையில் ஏற்பாடு செய்யப்படவில்லை என கூறிய ஆளுநர், இது தனக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மேற்கு வங்கத்துக்கும் அவமானம் என்று குற்றம் சாட்டியிருந்தார். இதனால் மம்தாவுக்கும்  ஆளுநருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கருதப்பட்டது. இந்த சூழ்நிலையில், மம்தா வீட்டில் நடந்த காளிபூஜையில் ஆளுநர் பங்கேற்றதும், அவருக்கு மம்தா சிறப்பான வரவேற்பு அளித்ததும் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Stories: