புதுக்கோட்டை: பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு புதிய விமான சேவை (இண்டிகோ) துவங்கியது. புதிய விமானத்திற்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பளிக்கப்பட்டது. தென்மாவட்டங்களில் மதுரைக்கு அடுத்தபடியாக தொழில் நகரமான தூத்துக்குடியில் தான் விமான நிலையம் உள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து தினமும் 5 முறை சென்னைக்கு சிறிய ரக விமானம் இயக்கப்படுகிறது. இந்நிலையில் புதிதாக பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு அதிகாலை 6.50 மணிக்கும், தூத்துக்குடியில் இருந்து பெங்களூருக்கு 7.30 மணிக்கும் நேற்று முதல் விமான சேவை துவங்கப்பட்டது புதிய விமான சேவை வருகையை முன்னிட்டு விமான நிலைய தீயணைப்பு இயந்திரங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு வழங்கப்பட்டது. இந்த விமானத்தில் 78 பயணிகள் பயணிக்கலாம். பெங்களூருவில் இருந்து 78 பயணிகளுடன் தூத்துக்குடிக்கு வந்த விமானத்தில் மறுமார்க்கமாக பெங்களூருக்கு 12 பயணிகள் தங்களது பயணத்தை துவங்கினர். தூத்துக்குடியில் இருந்து ஒரு மணி நேர பயணத்தில் பெங்களூருவை சென்றடையும்..