வெள்ளி, சனி, ஞாயிறு விரத நாட்கள் ஆடு, கோழி இறைச்சி விற்பனை மந்தம்: தீபாவளி பண்டிகை வியாபாரம் ‘டல்’

திருவள்ளூர்: இந்த ஆண்டு தீபாவளி வியாபாரம் மிகவும் மோசமாக அமைந்துள்ளதாக அனைத்து தரப்பு வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை நாளில் வழக்கத்திற்கு மாறாக ஆடு, கோழி இறைச்சி விற்பனை பல மடங்கு அதிகமாக விற்பனையாவது வழக்கம். இவைகளின் விலை வழக்கத்தை விட அன்று அதிகமாக இருக்கும். ஆனால் இந்த தீபாவளிக்கு இறைச்சி விற்பனை தலைகீழாக மாறிவிட்டது.பொதுவாக செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் மாமிச உணவுகளை பலர், சாப்பிட மாட்டார்கள். இவ்வாண்டு தீபாவளி ஞாயிற்று கிழமையில் வந்தாலும், அன்றைய தினம் கல் 12.10 மணிக்கு அமாவாசை பிறந்ததால், அசைவ உணவினை மக்கள் தவிர்த்தனர்.இதனால் தீபாவளி பண்டிகை இறைச்சி விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று (28ம் தேதி) கந்தசஷ்டி துவங்குகிறது. நாளை குரு பெயர்ச்சி. வரும் 2ம் தேதி இரவு கந்தசஷ்டி விரதம் சூரசம்மாரம் நடந்த பிறகு முடிகிறது.

இவ்வாறு வரும் 2ம் தேதி வரை இறைச்சி விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுவாக தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் அதிக விலை நிர்ணயம் செய்து அமோகமாக இறைச்சி விற்பனை செய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அதற்கு வழியில்லாமல் போய் விட்டது. இதுகுறித்து இறைச்சி வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘இந்த ஆண்டு தீபாவளி, இறைச்சி வியாபாரிகளை கடுமையாக பாதித்துள்ளது. வரும் 2ம் தேதி வரை விரதமாக கடை பிடிக்கப்படுவதால் எங்கள் தொழில் மோசம் அடைந்துள்ளது. எனது கடையில் தீபாவளி தினத்தில் முதல் நாள் இரவு முதல் விற்பனை தொடங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு வியாபாரம் மோசமாகி விட்டது. புரட்டாசி மாதத்தில் விற்பனை மந்தமாக இருந்தது. தீபாவளியாவது கை கொடுக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அந்த வியாபாரமும் பாதித்து விட்டது என்றார்.

Related Stories: