எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான ஒப்பந்தங்களை எங்களுக்கே கொடுங்கள்: மத்திய பொதுப்பணித் துறை கடிதம்

புதுடெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டு வரும் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடங்களுக்கான கட்டுமான ஒப்பந்தங்களை தங்களுக்கு தருமாறு மத்திய சுகாதாரத் துறையை பொதுப்பணி துறை வலியுறுத்தி உள்ளது. மத்திய அரசின் மிகப் பெரிய கட்டுமான நிறுவனமான பொதுப்பணித் துறை மத்திய, மாநில அரசுகள் மற்றும் இதர நிறுவனங்களுக்காக, ஒப்பந்தத்தின் அடிப்படையில், கட்டிடங்கள் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இது தவிர நட்பு ரீதியில் வெளிநாடுகளிலும் கட்டுமான பணியில் திறம்பட செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுப்பணித் துறையின் இயக்குனர் ஜெனரல் பிரபாகர் சிங், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அண்மை காலங்களில் பொதுப்பணித் துறையின் செயல்பாடுகளில் அடிப்படை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

சுகாதார உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் ஜம்மு, ஸ்ரீநகரில் எய்ம்ஸ், பாகல்பூர், பாட்னாவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், டெல்லியில் ஆர்எம்எல் மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிளாக் உள்ளிட்டவற்றை பொதுப் பணித் துறை கட்டி முடித்துள்ளது. தற்போது, தமிழகத்தில் மதுரை மற்றும் அரியானா, பீகார், கர்நாடகா, கேரளா, கோவா, திரிபுரா மாநிலங்களில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் சுகாதார அமைச்சகத்தால் கட்டப்பட உள்ளது.  இவற்றை கட்டும் பணியை மத்திய பொதுப்பணித் துறைக்கு வழங்குவதில் முன்னுரிமை அளிக்கும்படி கேட்டுக்  கொள்கிறேன்.கட்டுமான பணித் துறையில் உள்ள நடத்தை விதிகளை முறையாக, சரியாக பின்பற்றுவது, நீண்ட கால அனுபவம் ஆகியவற்றுடன் எவ்வித சிக்கலும் இன்றி சிறப்பான முறையில் செயல்படுவோம். எனவே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை ஒப்பந்தங்களை பொதுப்பணித் துறைக்கு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: