அபுதாபி படகுப்போட்டி: தங்கம் வென்ற நேத்ரா குமணன்

சென்னை: ஐக்கிய அரபு குடியரசு நாடான அபுதாபியில், சர்வதேச அளவிலான அபுதாபி ஓபன் படகுப் போட்டி நடந்தது. இதில் 29 நாடுகளை சேர்ந்த  200 வீரர்,  வீராங்கனைகள் பங்கேற்றனர். லேசர் ரேடியல், ஆப்டிமிஸ்ட் என 4 பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியை அபுதாபி படகுஓட்டுதல் மற்றும் பாய்மரப் படகு சங்கம் நடத்தியது.லேசர் ரேடியல் பிரிவில் பல்கேரியா, டென்மார்க், நெதர்லாந்து, நார்வே, உக்ரைன், அமெரிக்கா என 11 நாடுகளை சேர்ந்த 23 பேர் பங்கேற்றனர். இவர்களில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த நேத்ரா குமணன் பங்கேற்றார். தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற போட்டியில் தொடக்கம் முதல் நேத்ரா குமணன் முன்னிலை வகித்து வந்தார். ஆனால், ஓமனின் ஜக்காரியா,  உக்ரைனின் ஆஸ்கர்  ஆகியோர் கடும் சவாலை தந்தனர்.

எனினும், முடிவில் முதலிடம் பிடித்த நேத்ரா குமணன், தங்கப் பதக்கத்தை வென்றார். கூடவே 1.20 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசும் அளிக்கப்பட்டது. இந்தப் பிரிவில்  ஓமன், நார்வே வீரர்கள் முறையே 2வது, 3வது இடங்கள் பிடித்தனர். இந்த வெற்றியின் மூலம் நேத்ரா  குமணன், ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றார். தங்கம் வென்ற அவரை,  தமிழ்நாடு படகு ஓட்டும் சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.

Related Stories: