ஆஸ்திரேலியாவை சுருட்டி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி: முதன்முறையாக வென்று சாதனை படைத்தது

கிங்ஸ்டவுன்: டி.20 உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 8 சுற்றில் குரூப் 1 பிரிவில் கிங்ஸ்டவுனில் இன்று காலை நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த ஆப்கன் அணியில், ரஹ்மானுல்லா குர்பாஸ் 49 பந்தில், 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 60, இப்ராஹிம் சத்ரான் 48 பந்தில் 6 பவுண்டரியுடன் 51 ரன் எடுத்தனர். முதல் விக்கெட் பார்ட்னர் ஷிப்பிற்கு இவர்கள் 118 ரன் எடுத்த நிலையில் பின்னர் வந்தவர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். 20 ஓவரில் ஆப்கானிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன் எடுத்தது. கம்மின்ஸ் 18வது ஓவரின் கடைசி பந்து மற்றும் 20வது ஓவரின் முதல் 2 பந்துகளில் விக்கெட் எடுத்து ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

வங்கதேசத்திற்கு எதிரான கடைசி போட்டியிலும் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த அவர், அடுத்தடுத்த போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். ஆஸ்திரேலிய பீல்டிங் இன்று படுமோசமாக இருந்து 5 கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டனர். பின்னர் களம் இறங்கிய ஆஸி. அணியில் டிராவிட் ஹெட் ரன் எதுவும் எடுக்காமலும், கேப்டன் மார்ஷ் 12, டேவிட் வார்னர் 3, மார்கஸ் ஸ்டாய்னிஸ் 11 ரன்னில் அவுட் ஆகினர். அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 41 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 59 ரன் அடித்தார். பின்னர் வந்த டிம் டேவிட 2, மேத்யூ வேட் 5, கம்மின்ஸ் 3, ஜாம்பா 9 ரன்னில் ஆட்டம் இழந்தனர். 19.2 ஓவரில் 127 ரன்னுக்கு ஆஸ்திரேலியா ஆல்அவுட் ஆனது. இதனால் 21 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றது.

2 ஓவரில் 20 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய குல்பாடின் நைப் ஆட்டநாயகன் விருது பெற்றார். நவீன் உல்ஹக் 3 விக்கெட் எடுத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக ஆஸ்திரேலியாவை ஆப்கானிஸ்தான் வென்றுள்ளது.
குரூப் 1 பிரிவில் இந்தியா 4, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் தலா 2 புள்ளிகள் எடுத்துள்ளனர். வங்கதேசம் வெற்றி எதுவும் பெறவில்லை. நாளை இரவு 8 மணிக்கு இந்தியா-ஆஸ்திரேலியா, நாளை மறுநாள் காலை 6 மணிக்கு ஆப்கானிஸ்தான்-வங்கதேசம் மோதுகின்றன. இதில் இந்தியா வெல்லும் பட்சத்தில் வங்கதேசத்தை ஆப்கானிஸ்தான் வீழ்த்தினால் ஆஸ்திரேலியா வெளியேற வேண்டியதுதான். இதனால் அரையிறுதிக்கு தகுதிபெற போவது யார் என்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

 

 

The post ஆஸ்திரேலியாவை சுருட்டி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி: முதன்முறையாக வென்று சாதனை படைத்தது appeared first on Dinakaran.

Related Stories: