இம்சை அரசன் 24ம் புலிகேசி: புகழேந்தி பற்றி தினகரன் கிண்டல்

பெங்களூரு: ‘‘அமமுகவில் இருந்து வெளியேறிய புகழேந்தி, ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ போன்று செயல்படுகிறார்,’’ என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கிண்டலடித்துள்ளார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில்  அடைக்கப்பட்டுள்ள  சசிகலாவை, அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் நேற்று சந்தித்து  பேசினார். பின்னர், சிறைக்கு வெளியே வந்த அவர் அளித்த பேட்டி: சக கைதிகளை போன்றே சசிகலாவும் சீருடை அணிந்துள்ளார்.   தீபாவளிக்கு அவர் வெளியே வருவார் என்று யாரும் வதந்தியை பரப்ப  வேண்டாம். வினய்குமார் அறிக்கையில் சசிகலாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை  என்று கூறப்படுகிறது. தமிழக இடைத்தேர்தல் முடிவு குறித்து அவரிடம் ஆலோசனை  நடத்தினேன். தமிழகத்தை  பொறுத்தவரையில் 1991ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு ஆர்.கே நகர் இடைத்தேர்தலை  தவிர மற்ற இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிதான் வெற்றி பெற்றுள்ளது.

தற்போது  நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை அதிமுக இமாலய வெற்றி என்று  நினைத்து கொள்ள வேண்டாம்.  இவ்வாறு  அவர் கூறினார். பின்னர், கட்சியில் இருந்து வெளியேறிய புகழேந்தி குறித்து  தினகரன் கூறுகையில்,  ‘‘‘புகழேந்தி அமமுகவில்  இருந்து பிரிந்து சென்றிருப்பதால்  எந்த பாதிப்பும் இல்லை. அதேபோல் முதல்வரை அவர்  சந்தித்து பேசியதால், எந்த பயனும் இல்லை. சமீப நாட்களாக அவரது நடவடிக்கையை  பார்க்கும்போது 24ம் புலிகேசியை  நினைவு படுத்துவது போன்று உள்ளது,’’ என்றார்.

Related Stories: