புழல் விநாயகபுரம் பகுதியில் அடிப்படை வசதியில்லாத பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி

புழல்: சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், 26வது வார்டுக்கு உட்பட்ட புழல் விநாயகபுரம் பகுதியில் சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு மாநகர  பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, பெரம்பூரிலிருந்து விநாயகபுரம் வரை (தடம் எண் 142) எட்டு பேருந்துகளும், மந்தைவெளியில் இருந்து விநாயகபுரம் வரை (தடம் எண் 29) ஒரு பேருந்தும் இயக்கப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில்  பெய்துவரும் மழையால் பேருந்து நிலையம் குண்டும் குழியுமாக மாறி ஆங்காங்கே சிறு சிறு குளம் போல் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் இந்த பேருந்து நிலையத்தில் புழல் புறக்காவல் நிலையம், மறுபக்கத்தில் அம்மா உணவகம் உள்ளது.  பேருந்து நிலைய வளாகத்தில் தனியார் வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள், சைக்கிள்கள் ஏராளமாக ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், மாநகர பேருந்துகளை உள்ளே வந்து திருப்ப முடியாமல் டிரைவர்கள் பெரிதும்  சிரமப்படுகின்றனர்.

இந்த பேருந்து நிலையத்தில் நிழற்குடை, இருக்கைகள் இல்லாததால் பஸ்சுக்கு காத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பயணிகள் வெயில் மழை காலங்களில் சிரமப்படுகின்றனர். இங்குள்ள கழிப்பறை கட்டிட வசதி இருந்தும்  பராமரிப்பில்லாமல் உள்ளதால் பஸ் பயணிகள் அதை பயன்படுத்த முடியவில்லை. இதனால், பெண் பயணிகள் இயற்கை உபாதைகளை கழிக்க மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், மின் விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் பஸ்சுக்கு  காத்திருக்கும் பெண்கள் அச்சப்படும் நிலை உள்ளது. இதை பயன்படுத்தி செயின் மற்றும் செல்போன் பறிப்பு  உள்ளிட்ட சம்பவங்களும் நடைபெறுகிறது.

 எனவே இதுகுறித்து சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுத்து விநாயகபுரம் பேருந்து நிலையத்தை புதுப்பித்து அங்கு  நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனியார் வாகனங்களை அகற்றி, மின்விளக்கு வசதி, கழிப்பிட வசதி, இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: