மார்த்தாண்டம் மீன்சந்தை அருகே சாலையோரம் நிறுத்திய காருக்கு பார்க்கிங் கட்டணம்

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் காந்தி மைதானத்தையொட்டிய கருங்கல் சாலையில் ‘தொடுவெட்டி சந்தை’ உள்ளது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சந்தை நாளாக இருந்த போதிலும், தினசரி சந்தையாகவே செயல்பட்டு வருகிறது. மீன், வாழைத்தார், காய்கறிகள்  விற்பனைக்கு என தனித்தனி பகுதிகள் சந்தையில் உள்ளன. நகராட்சியால் தனித் தனியாக குத்தகைக்கு விடப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தைக்குள் வாகனங்கள் செல்ல சிறு கட்டணம் வசூலிக்க அனுமதியுண்டு. இதை மீறி குத்தகைதாரர்கள் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதை நகராட்சி நிர்வாகமோ, போலீசாரோ கண்டுகொள்வதில்லை. இந்த நிலையில் அரசு அதிகாரி ஒருவர் மீன் சந்தைக்கு முன்புறம் சாலையோரம் தனது காரை நிறுத்திவிட்டு மீன் வாங்க சென்றுள்ளார். அவர் திரும்பி வந்தவுடன் அங்கு நின்ற ஒரு நபர் காருக்கு பார்க்கிங் கட்டணம் ரூ.160 செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரி சாலையில் நிறுத்தப்பட்ட காருக்கு எதற்கு நான் கட்டணம் செலுத்த வேண்டும் என கேட்டுள்ளார்.

அதற்கு அந்த நபர் எங்கு நிறுத்தினாலும் கட்டணம் வசூலிப்போம். நாங்கள் சந்தையை குத்தகைக்கு எடுத்துள்ளோம் என கூறி அடாவடி செய்துள்ளார். இதனால் வேறு வழியின்றி அந்த அதிகாரி ரசீது கேட்டுள்ளார். உடனடியாக அந்த நபர் காய்கறி சந்தையில் வசூலிக்கப்படும் ரசீதை வாங்கிவந்து ரூ.160 எழுதி அந்த அரசு அதிகாரியிடம் கொடுத்துள்ளார். அதன்பிறகு அதிகாரி பணத்தை செலுத்திவிட்டு, அதிருப்தியுடன் அங்கிருந்து தனது காரை எடுத்து சென்றார். பின்னர் அவர் நகராட்சி அலுவலகத்தில் புகார் செய்துள்ளார்.

Related Stories: